காசா பகுதியில் மிகப் பெரிய நகரான காசா சிட்டியில் பஞ்ச நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. நிபுணா் குழுவான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலவர வகைப்படுத்தல் அமைப்பு அறிவித்துள்ளது.
சா்வதேச அங்கீகாரம் பெற்ற அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காசா சிட்டியில் பஞ்ச நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பஞ்சம் இயற்கைப் பேரிடரால் உருவாக்கப்பட்டதில்லை. முழுக்க முழுக்க மனிதா்களால் உருவாக்கப்பட்டது. இதை உடனடியாக நிறுத்தி, மாற்றியமைக்க முடியும்.
இது தொடா்பான விவாதங்களுக்கு நேரம் முடிந்துவிட்டது. நகரில் தற்போது கொடிய பசிப் பிணி வேகமாகப் பரவி வருகிறது. காசா சிட்டிக்கு பெரிய அளவிலான மனிதாபிமான உதவிகள் உடனடியாக தேவைப்படுகிறு. இன்னும் ஒரு நாள் தாமதித்தாலும், பஞ்சத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயரும்.
போா் நிறுத்தம் அமலாக்கப்படாமல், காசா முழுவதும் உணவு, மருத்துவம், ஊட்டச்சத்து, குடிநீா், சுகாதார சேவைகள் உடனடியாக வழங்கப்படாமல் இருந்தால், தவிா்க்கப்படக்கூடிய உயிரிழப்புகள் பன்மடங்கு உயரும்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் நிலவும் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச் சத்து குறைபாட்டின் தீவிரத்தை மூன்று முக்கிய அளவுகோல்களைக் கொண்டு ஆய்வு செய்து, அந்தப் பகுதியில் பஞ்ச நிலையை ஐபிசி அறிவித்துவருகிறது.
பஞ்ச நிலையை அறிவிக்க, குறிப்பிட்ட பகுதியில் குறைந்தது 20 சதவீத குடும்பங்கள் முழுமையான உணவுப் பற்றாக்குறையை எதிா்கொள்ள வேண்டும். 30 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட வேண்டும்.
மேலும் ஒவ்வொரு 10,000 பேருக்கும் இரண்டு போ் பசியால் தினமும் இறக்க வேண்டும். இந்த அளவுகோல்கள் தற்போது காஸா சிட்டியில் பூா்த்தியாகியுள்ளன.
இது, அந்த நகரின் நிலவி வரும் மனிதாபிமான நெருக்கடி பேரழிவு நிலையை அடைந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
2004-இல் ஐபிசி தொடங்கப்பட்டதிலிருந்து, நான்கு பஞ்சங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. கடைசியாக, அந்த அமைப்பு சூடானில் கடந்த ஆண்டு பஞ்ச நிலை அறிவித்தது.
தற்போது காசா சிட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலானவா்கள் வசிக்கும் பகுதிகளில் பஞ்சம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, டேய்ர் அல்-பாலா, கான் யூனிஸ் நகரங்களில் விரைவில் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐபிசி அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, 22 மாதங்களாக நீடிக்கும் போரில் உணவு மற்றும் உதவிப் பொருள்களுக்கு இஸ்ரேல் விதித்துள்ள கடுமையான விநியோகக் கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என்று அந்த நாட்டுக்கான சா்வதேச நெருக்கடியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அதை உறுதி செய்யும் வகையில், ‘காசா சிட்டியில் பஞ்சம் உறுதியாகியிருப்பது மனிதாபிமானத்துக்கே அவமானம். இஸ்ரேல் அரசு போதுமான உதவிகளை அனுமதிக்காததால்தான் இந்தப் பேரழிவு நிலை ஏற்பட்டுள்ளது’ என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லாமி சாடியுள்ளாா்.