கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களது பயணப் பொதிகள் மற்றும் நபர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மேலும், கியூ வீதியில் வசிப்பவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மட்டுமே அந்த வீதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவப் பரிந்துரையின் பேரில் மறுநாள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். எனினும், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐந்து விசேட வைத்தியர்கள் கொண்ட குழு அவரை கண்காணித்து வருகிறது.