திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸின் வழிகாட்டலின் கீழ், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர் மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் சுமார் 300 பள்ளிவாசல்களின் 600 க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்தக் கருத்தரங்கில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், பள்ளிவாசல் எவ்வாறு ஒரு சமூக மையமாக செயற்படுவது, இலங்கை வக்பு சபை, இலங்கை வக்பு நியாய சபை மற்றும் முஸ்லிம் தரும நம்பிக்கை பொறுப்புகள் (Trust) ஆகியன தொடர்பில் நம்பிக்கையாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டன.
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அறிமுகமும் அதன் சேவைகள் தொடர்பான தொடக்கவுரையை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹ்மத் வழங்கியதுடன் மஸ்ஜித் நம்பிக்கையாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தெளிவுரையை வழங்கினார், வக்பு பிரிவின் அதிகாரி அஷ்ஷேக் எம்.ஐ. முனீர், வக்பு நியாய சபை பதில் செயலாளர் எம்.என்.எம். ரோஸன் ஆகியோர் கலந்து கொண்டு தெளிவுரைகளை வழங்கினர். மேலும் இந்த கருத்தரங்கினை வக்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ. மிஸார் தொகுத்து வழங்கினார்.
மேலும் கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, மூதூர் பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் மூதூர் பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் திருமதி. ரொஷானா றெசீன் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ், மூதூர் மஜ்லிஸ் ஷுரா தலைவர் மௌலவி எம்.எம்.கரீம் நத்வி குழு உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பள்ளிவாசல் சம்மேளன உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வினை முஸ்லிம் சமய பண்பாட்டால்கள் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்டத்துக்குப் பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஆர்.எம். நிம்ஷாத், எம்.பி.எம்.பஸ்மி மற்றும் என்.எப்.சிபானி ஆகியோரினால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)