இரண்டாவது பெரும் இன அழிப்பு (Holocaust)
காஸாவிலிருந்து வெளிவரும் கொடூரமான காட்சிகளுக்கு இரண்டு வருடங்கள் அண்மித்து வரும் நிலையில் அது சிலரை மனந்தளரச் செய்து, அவர்களின் ஈமானை ஆட்டம் காணச் செய்வதாக அமைந்திருக்கின்றன. முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்களின் எரிச்சலூட்டும் மௌனத்தின் மத்தியில், அதன் மிகப்பெரிய வளங்கள் அனைத்தும் பெட்டகங்களில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில், குடிமக்களின் வாய்களும் கைகளும் உறுதியாக கட்டப்பட்டிக்கும் நிலையில் பாடப்புத்தக மாதிரியிலான இனப்படுகொலை (Genocide) அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வின் சக்தியில் பேரளவில் நம்பிக்கை கொண்டவர்கள், ஊடகங்களின் பேரழிவு புயலால் அள்ளுண்டு போய் சந்தேகச் சேற்றில் புதைந்து விடுகிறார்கள். அவர்களின் கண்கள் இருளை மட்டுமே பார்க்கின்றன, ஒரு கெளரவமான ஈமானிய சமூகம் சர்வவல்லமையுள்ள படைப்பாளனால் கைவிடப்பட்டு, தன்னைத் தானே அழித்துக் கொள்வது போன்ற புலம்பல்களை மட்டுமே காதுகள் கேட்கின்றன.
முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் யஹுத் பராக், அக்டோபர் 7, 2024 அன்று அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியில், அக்டோபர் 7 தாக்குதலால் இஸ்ரேலிய சமூகம் கடுமையான கோபத்தில் உள்ளது என்றும் அந்த ஆட்டத்தின் இறுதி முடிவு படு பயங்கரமானதாக இருக்கும் என்றும் பிரஸ்தாபித்தார். நக்பாவை (1948 இல் நடந்த பலஸ்தீனியர்களின் பெருந்திரளான இடப்பெயர்ச்சி மற்றும் உடமைப்பறிமுதல்) மீண்டும் ஏற்படுத்து வதற்கான ஒரு வெட்கக்கேடான சமிக்ஞை என்றே இதனை பார்க்க முடிகிறது. ஹொலகோஸ்ட்டின் கொடூரமான நினைவுகளால் பீதியடைந்து விரண்டோடி கொண்டிருந்த யூதர்கள், இஸ்ரேல் எனும் தேசம் தங்கள் தலைக்கு மேல் ஒரு பாதுகாப்பான கூரையை வழங்கியுள்ளதாக நம்பினர், தம் சொந்த வீட்டில் இருப்பது போன்ற பாதுகாப்பு உணர்வில் வாழ்ந்தனர். ஆனால் அக்டோபர் 7 ஆம் தேதி தாக்குதலானது, ஹொலகோஸ்ட் பற்றிய அறிவை பாடப்புத்தகங்கள் மூலமும் பிரசங்கங்கள் வாயிலாகவும் மட்டுமே அறிவதற்கு வரையறுக்கப்பட்டிருந்த பெரும்பாலான தற்கால இஸ்ரேலியர்களிடையே அந்த நினைவை திடீரென கிளறியது. அவர்கள் இதை இரண்டாவது ஹொலகோஸ்ட் எனக் கருதி பீதியில் ஆழ்ந்துள்ளனர். 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து , பலம் வாய்ந்த உத்தியோகபூர்வ அரபு இராணுவங்களுடனும் கெரில்லாப் படைகளுடனும் நடத்திய அனைத்துப் போர்களிலும் வியக்கத்தக்க வகையில் அது வெற்றியடைந்தது. இஸ்ரேலிய யுத்தக் கோட்பாட்டின்படி எதிரிப் பிரதேசங்களுக்குள் புகுந்து மிகக் குறுகிய போர்கள் நடத்துவது அவசியம். அது வெற்றி கொண்ட அனைத்துப் போர்களும் அவ்வாறே அமைந்தன.
இப்போது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நெருங்கியும் , போரின் முடிவு கண்ணுக்கெட்டாத நிலையில் அவர்கள் தடுமாறுகின்றனர். இன்று இஸ்ரேலிய ஆன்மாவை ஆதிக்கம் செலுத்துவது கோபம், பழிவாங்கல், பைத்தியக்காரத்தனம் மற்றும் அவமானம் ஆகியவற்றின் கலவை தான் இஸ்ரேலிய ஆன்மாவை ஆதிக்கம் செலுத்துகிறது. ஏனெனில் அது காஸா துளைகளிலிருந்து வெளிவரும் எலும்பும் தோலுமான எலிக் கூட்டத்துடன் போராடுகிறது – எவராலும் வெல்ல முடியாத இராணுவம் (Invincible army) என்ற பெருமைக் கதை ஒரு கட்டுக்கதையாக உடைக்கப்படுகிறது.
ஆனால் அறிவிலும் விசுவாசத்திலும் உறுதியாக வேரூன்றி தலைநிமிர்ந்து நிற்கும் முஃமின்கள், நிகழ்வுகளால் தாக்கமடைந்து , விரக்தியால் தங்கள் தலைகளை மணலில் புதைத்துக் கொள்வதற்குப் பதிலாக, இந்த தாங்க முடியாத கொடூரத்துக்குப் பின்னால் மறைந்துள்ள தெய்வீக ஞானத்தை வெளிக்கொணர முயல்கிறார்கள். காஸாவில் உள்ள மக்களின் துன்பங்களுக்காக அவர்களின் இதயங்கள் பெரிதும் துடித்த போதும் , அவர்கள் இறைவனின் ஆணையில் மிகவும் திடவுறுதியுடன் இருக்கிறார்கள்: “அல்லாஹ் எங்களுக்காக விதித்து வைத்திருப்பவற்றைத் தவிர எதுவும் எங்களை அடையாது. அவன்தான் எங்களின் பாதுகாவலன். மேலும், நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே முழுமையாய்ச் சார்ந்திருக்க வேண்டும். (தௌபா:51).
இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதல், இனப்படுகொலையை எவ்வித கட்டுப்பாடுமின்றி கட்டவிழ்த்துவிடுவதற்கான வசதியான சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பலஸ்தீனியர்கள் ஏதோ சொர்க்க ஆடம்பரங்கள் அனைத்தும் வழங்கப்பட்டிருந்தும் கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர், அதனால் அவர்களது காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான ஒரு தார்மீகப் போராட்டமே நடத்தப்படுகிறது என்று சித்திரிக்க முயல்கிறார்கள். ஆனால் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியது போல் உண்மை இதற்கு நேர்மாறானது:
“ஹமாஸின் தாக்குதல்கள் பூச்சிய வெளியில் இருந்து நடத்தப்படவில்லை என்பதை அங்கீகரிப்பதும் முக்கியம். பாலஸ்தீன மக்கள் 56 ஆண்டுகால மூச்சுத் திணற வைக்கும் ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள் என்பதே உண்மை.”
(24 அக்டோபர் 2023 – https://www.un.org/sg/en )
பொய்யை உண்மையெனச் சித்திரிப்பதில் சியோனிஸ்டுகளை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது, ஏனெனில் அது அவர்களின் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது; சூழ்ச்சி செய்வது என்பது ஒரு தனித்துவமான யூத வாழ்க்கை முறையாகும். கொடூரமான ஒடுக்குமுறையில் ஈடுபடுவதில் அவர்களுக்குள்ள தந்திரமிக்க தேர்ச்சியையும், அவ்வாறு செய்வதன் மூலம் உலகளாவிய அனுதாபத்தை பெற்றுக் கொள்வதையும் பார்த்து ஷைத்தான் கூட பொறாமைப்படுவான் – உலக அளவில் இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனங்கள் இணையற்ற தொழில்முறை சிறப்போடு இருப்பதற்கு இதுதான் காரணம்.
போலித்தனம் அம்பலமாகிறது
இரண்டாம் உலகப் போரின் முடிவு உலகிற்கு ஒரு புதிய நிர்வாக ஒழுங்கை உருவாக்கித் தந்து, ஐக்கிய நாடுகள் சபை உருவாக வழிகோலியது. ஐரோப்பியர்கள் தங்களுக்குள் இரத்தக்களரிப் போர்களை நடத்தி, ஒருவரையொருவர் கொடூரமாகக் கொன்றனர், அவற்றில் மிகவும் கொடூரமானவை முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களாகும். 1940களின் முற்பகுதியில், பிரெஞ்சுக்காரர்களும் ஜெர்மனியர்களும் இன்று போல ஒரே மேசையில் அமைதியாக அமர்ந்திருப்பதை யாரும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. போர் என்பது தீங்கானது என்ற உண்மையை உணர்ந்த பிறகு, அவர்கள் ஒரு சுய பரிசோதனையில் ஈடுபட்டு மேற்கத்திய விழுமியங்கள் (Western Values) என்று அழைக்கப்படும் ஒன்றை உருவாக்கினர். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டு மற்றொரு பயங்கரமான ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்றை உலகம் கண்டது, அதுதான் குழப்பத்தின் சிக்கலான வலைப் பின்னலின் மத்தியில் இஸ்ரேல் பிறந்ததாகும். நாகரிகமற்ற நாட்டுப்புற அரபிகள் வாழுகின்ற, காடுகளால் சூழப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒரு அறிவொளி பெற்ற நாடாக அது தன்னைப் பீற்றிக் கொண்டது.
1953 ஆம் ஆண்டில், இஸ்ரேலின் ஸ்தாபகத் தந்தையான டேவிட் பென்குரியன், தனது பிரதம மந்திரி சுமைகளைத் துறந்து, இஸ்ரேலின் பாதுகாப்புக் கோட்பாடுகளை உருவாக்கும் நோக்கில் ஆழமான சிந்தனையில் ஈடுபடுவதற்காக தெற்கு இஸ்ரேலில் உள்ள தனது கிராம வீட்டிற்குச் சென்று குடியமர்ந்தார். இந்தக் கோட்பாடுகள், கடவுளின் வழிகாட்டல்களை அதிகம் நம்பாமல், நீண்ட மனித அனுபவங்களை மையமாக வைத்து உருவானவை, ஏனெனில் இஸ்ரேலின் பெரும்பாலான ஸ்தாபக தலைவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே மதத்தை நம்பினர். எனினும் ஒரு நாடாக இஸ்ரேல் எப்போதும் மதச் சாயல்களிலே இருந்து வருகிறது. மத நூல்களைத் திரித்து, குர்ஆன் விவரிக்கிறதுபோல் அவற்றின் அர்த்தத்தை சிதைப்பதற்காக அவற்றின் சரியான இடங்களிலிருந்து புரட்டுகின்ற மதமே அது. இது அவர்களது பிரிக்க முடியாத பழக்கம். பென்குரியன் யதார்த்தத்தின் அனைத்துப் பக்கங்களையும் சரியாகப் புரிந்துகொண்ட தந்திரசாலி. ஷைத்தானிடமிருந்து கற்றுக்கொண்ட தந்திரத்துடன், பூர்வீக பலஸ்தீன மக்களுடனான உறவின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் விரிவாகக் கூறிவைத்தார். இஸ்ரேலின் உயிர்வாழ்வு பலஸ்தீனியர்களின் கொடூரமான அழிவில் மட்டுமே சார்ந்துள்ளது என்பதை வெளிப்படுத்தி தனது பயங்கர சர்வாதிகார தன்மையை நிரூபித்தார்: “நமக்குள் உண்மையை நாம் புறக்கணிக்காதிருப்போம். அரசியல் ரீதியாக நாம் ஆக்கிரமிப்பாளர்கள், அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள். நாடு அவர்களுடையது, அதேசமயம் நாம் இங்கு வந்து குடியேற முயற்சிக்கும் கூட்டம்.” (நோம் சாம்ஸ்கியின் “Fateful Triangle” என்ற நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது). அவர் தனது நினைவுக் குறிப்புகளில், தான் ஒரு அரபுத் தலைவராக இருந்தால் இஸ்ரேலுடன் ஒருபோதும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டார் என்று எழுதி வைத்தார். அரேபியர்கள் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே பார்க்கிறார்கள் என்று அவர் வாதிட்டார்: “நாங்கள் வந்து அவர்களின் நாட்டைத் திருடிவிட்டோம். அவர்கள் அதை ஏற்றுக்கொள்வது எந்த வகையில் நியாயம்?”
பென்குரியன் மையக் கோட்பாடு, இஸ்ரேலின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அனைத்து நெறிமுறைகளையும் புறக்கணித்து சர்வதேச சட்டங்களை இரக்கமின்றி உதாசீனம் செய்வதில் உறுதியாக உள்ளது. இஸ்ரேல் எந்தளவு இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் வலுப்பெற்றிருந்தாலும், ஒரு வல்லரசின் ஆதரவு இல்லாமல் நாடு நிலைத்திருக்க முடியாது என்று அவர் எப்போதும் நம்பினார், இது கீழே மேற்கோள் காட்டப்பட்டுள்ள குர்ஆனிய உண்மையுடன் வெளிப்படையாக ஒன்றுபடுகிறது. நபிமார்களுக்கு மாறு செய்ததன் காரணமாக ஆதிகாலத்திலேயே இறைவனின் பாதுகாப்பு நீக்கப்பட்டதால், அமெரிக்க ஆதரவுதான் இஸ்ரேலைப் பாதுகாக்கிறது. அவர்களின் நாடு ஸ்தாபிக்கப்படும் வரை, அவர்களில் பெரும்பாலோர் புலம்பெயர்ந்த (Diaspora)அவமானப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்தனர், “கெட்டோ”(Ghetto- நகரத்தில் யூதர்கள் வாழும் இழிவான பகுதி) என்ற வார்த்தை அவர்களுக்காக உருவான ஒன்று.
அவர்கள் எங்கு காணப்படினும், அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ்வின் பொறுப்பில் அல்லது மனிதர்களின் பொறுப்பில் எங்கேனும் அவர்களுக்கு பாதுகாப்புக் கிட்டினாலே தவிர! மேலும் அவர்கள் அல்லாஹ்வின் சினத்திற்கும் ஆளாகிவிட்டனர். இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுவிட்டன. இவற்றிற்கெல்லாம் காரணம், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து வந்ததும் அவனுடைய தூதர்களை நியாயமின்றிக் கொலை செய்ததும்தான்; (ஆலு இம்ரான்: 112).
வரம்பு மீறுதல் மற்றும் ஆணவம் அவர்களின் பிரிக்க முடியாத இயல்பு, அவர்களது கைகளுக்கு எங்காவது அதிகாரம் கிடைத்தால் அவற்றை பொறுப்பற்ற முறையில் செய்வார்கள், ஏனெனில் பனூ இஸ்ரவேலர்களின் உடலில் இருந்து விஷமத்தனத்தை பிரிப்பது ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது போன்றது. அவர்கள் பூமியில் குழப்பத்தைப் பரப்ப முயற்சி செய்கிறார்கள். (ஆனால்) இத்தகைய குழப்பவாதிகளை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை.” (அல் மாஇதா: 64).
காஸா இனப்படுகொலை மேற்கத்திய விழுமியங்களை நடைமுறைப்படுத்துவதில் உச்ச பட்ச போலித்தனத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியது. உக்ரைனில் போர்க்குற்றங்களுக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பிடியாணையை அமல்படுத்துவதற்கு மேற்கத்திய தலைவர்கள் ஆத்திரமடைந்தவர்களாக முண்டியடித்துக்கொண்டு முன் சென்றனர், ஆனால் அவர்கள் ஐ.சி.சி பிடியாணையுடன் நிரூபிக்கப்பட்ட போர்க் குற்றவாளியான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தங்கள் மண்ணில் முழு மனதுடன் வெட்கமின்றி வரவேற்றனர். அமெரிக்கா ஒரு அவதூறான எட்டை எடுத்து ஐ.சி.சி வழக்குரைஞர்களை அமெரிக்க மண்ணில் தடைசெய்தது. இதுதான் பாரபட்சத்தின் முழுமையான வெளிப்பாடு. உலகளாவிய சியோனிச லாபி(Lobby) சர்வதேச சட்டத்தை எவ்வாறு கையாடல் செய்வது என்பதற்கு இது ஒரு அசிங்கமான எடுத்துக்காட்டு. நாடு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து ஐ.நா. தீர்மானங்களை மீறும் இஸ்ரேலின் கொடூரமான பழக்கம் இப்போது அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது, இதன் பிறகு மதிக்கப்படவென எந்த விதிமுறையும் கிடையாது.
இது சியோனிஸ்டுகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கை தம்முடன் கல்லறைக்கு கொண்டு செல்வார்கள் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
இஸ்ரேல் தனது வன்முறைச் செயற்பாடுகளின் அதி உச்சக்கட்ட வெளிப்பாட்டை எட்டியுள்ளது. மனித கற்பனை இதற்கு முன்பு அரிதாகவே யோசித்துள்ள சித்திரவதை, அவமானம், கொலை மற்றும் ஊனப்படுத்துதல் போன்றவற்றை அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்து வருகின்றனர். மிருகத்தனத்தின் தீவிரம் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல்களை விஞ்சிவிட்டது; திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பஞ்சம், மருத்துவமனைகள் மீதும் மருத்துவ ஊழியர்கள் மீதும் பத்திரிகையாளர்கள் மீதுமான துல்லியமான குண்டுவீச்சுக்கள் (Precision-bombing), தண்ணீர், உணவு லாரிகள், உதவி தேடுபவர்கள் போன்ற முக்கிய உயிர்நாடிகளை அழித்தல் மற்றும் கட்டாய இடப்பெயர்ச்சி அனைத்தும் அவர்களின் காட்டுமிராண்டித்தனத்திற்கு மேலும் வலுச் சேர்க்கின்றன. அவர்களை பீடித்துள்ள மனநோய் மிகவும் ஆழமானது, சட்டவிரோத குடியேறிக் (Illegal settlers) குழுக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மீது குண்டுவீசப்படுவதையும் மக்கள் வகை தொகையின்றி அழிக்கப்படுவதையும் பார்ப்பதற்காக காஸா கடலுக்கு படகுச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்கின்றன. தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுடன் , இறக்கும் மக்களின் அவலங்களையும் அலறல்களையும் மகிழ்ச்சியுடன் குடும்ப சகிதம் கண்டு கழிக்கிறார்கள். தீக்குண்டத்தார்(அஸ்-ஹாப் அல் உஹ்தூத்) போல இந்த அசிங்கமான நடத்தையைப் பற்றி அவர்கள் பெருமைப்படுகிறார்கள். புத்தகத்தில் உள்ள அனைத்து கொடுமைகளையும் செய்து, நல்லறிவுக்குத் திரும்புவதற்கான அனைத்து வாயில்களையும் மூடிய இஸ்ரேல், இப்போது அறுக்கப்பட்ட கால்நடையைப் போல இருக்கிறது, அது இறக்கும் முன் முழுப்பலத்துடன் துடிதுடித்து பின்னர் இறந்து போகும். ஒரு தேசத்தின் வரலாறு மூன்று கட்டங்களைக் கடந்து செல்கிறது: எழுச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் வீழ்ச்சி. புகழ்பெற்ற யூத வரலாற்றாசிரியர் ஈலன் பாப்பே (Ilan Pappe) கூறுவதை நோக்குங்கள்:
“வரலாற்று ரீதியாக, இது சியோனிசத்தின் கடைசி கட்டம் என்று நான் கொஞ்சம் எச்சரிக்கையுடன் சொல்லத் தயாராக இருக்கிறேன். வரலாற்று ரீதியாக, சித்தாந்த இயக்கங்களில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள், அவை காலனித்துவமாக இருந்தாலும் சரி அல்லது பேரரசுகளாக இருந்தாலும் சரி, அது பொதுவாக இறுதி அத்தியாயமாகும் [அதாவது] இரக்கமற்றது, அனைத்தையும் அடைய வேண்டுமென்ற பேரவா கொண்டது. அதன் பிறகு அவ்வடைவுகள் தாங்க முடியாத சுமையாக மாறும். பின்னர் அவை விழுந்து சரிந்துவிடும்.”
(14 ஜனவரி 2025- www.aljazeera.com ).
இருளுக்குப் பின்னால் உள்ள பிரகாசம்
காஸா போரில் இஸ்ரேல் பரிதாபமாக தோற்றுவிட்டது, இனப்படுகொலையின் விரிவான அர்த்தத்தில் மட்டுமே அது சிறந்து விளங்குகிறது. கிட்டத்தட்ட 6000 சிப்பாய்கள் இறந்தும் மற்றும் 15000 சிப்பாய்கள் காயமடைந்தும் உள்ளனர், இராணுவத்தினர் மத்தியில் மனச்சோர்வும் தற்கொலையும் அதிகரித்து வருகிறது, மேலும் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எந்த போர்க் கைதியையும் மீட்பதில் அவர்கள் முழுமையாக சக்தியற்று திண்டாடுகின்றனர். இதனை வரலாற்றுத் தோல்வியாக அன்றி வேறு எப்படி வர்ணிப்பது? இராணுவத்தில் 70% க்கும் அதிகமானோரும் மற்றும் தற்போதைய பாசிச அரசாங்கம் தங்கள் தொண்டையில் திணித்த “அறுதி வெற்றி” எனும் மாயாஜால டானிக்கை அருந்திய 71.6% பொதுமக்களும் ஆபத்தான அளவிலான போர் சோர்வைக் காட்டுகிறார்கள் – காஸாவிலிருந்து மக்களை வெளியேற்றுதல், ஒப்பந்தம் இல்லாமல் அனைத்து போர்க் கைதிகளையும் மீட்டல் மற்றும் போராட்டக் குழுக்களுக்கு மரண அடி கொடுத்தல் ஆகியனவே அந்த டானிக்காகும். வெடிகுண்டு காப்பரண்களில் வசிக்கும் இரண்டு மில்லியன் இஸ்ரேலியர்களையும், இந்த போரின் போது அச்சத்தில் நாட்டை விட்டு வெளியேறிய 500,000 இரட்டை குடியுரிமை பெற்றவர்களையும் புறக்கணித்து அவ்வப்போது நெதன்யாகுவின் வெளியிடும் அறுதி வெற்றி பற்றிய நலிவடைந்த பொய்களுடன் (Pathelogical lies) எந்த விவேகமுள்ள நபரும் உடன்பட முடியாது.
உலகின் முதல் நேரடி ஒளிபரப்பு இனப்படுகொலை (First livestreamed genocide) முக்கியமானதொரு குர்ஆனிய வாக்குறுதியை நிறைவேற்றுகிறது. பனூ இஸ்ரேல் செய்யும் இரண்டு பெரும் குழப்பங்கள் (பஸாத்) பற்றி குர்ஆன் முன்னறிவிக்கிறது. அவை ஒரே நேரத்தில் நிகழும் நிகழ்வுகள் அல்ல, ஆனால் கால அளவு, பரிமாணம் அளவில், உலகளாவிய முக்கியத்துவத்துடன் நிறுவனமயமாக்கப்பட்ட பெருங் குழப்பங்களாகும். பனூ இஸ்ரேல் நபி ஸூலைமான் (அலை) அவர்களின் போதனைகளிலிருந்து விலகிச் சென்ற காலகட்டத்தில் முதல் பெரும் குழப்பம் நிகழ்ந்ததாக பெரும்பாலான அறிஞர்கள் நம்புகின்றனர். இரண்டாவது பெரும் குழப்பம் என்பது திருடப்பட்ட பலஸ்தீன நிலங்களில் இஸ்ரேல் நிறுவப்பட்டதிலிருந்து தொடங்கி இன்று நாம் வாழும் இக்காலம் வரை தொடர்கிறது. இவ்விடயத்தை ஆழமாக ஆராய்வது இந்தக் கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதால், இதில் மேலும் அறிவைப் பெற ஆர்வமுள்ள எந்தவொரு வாசகரும் கலாநிதி ரஃபத் அல் மஸ்ரி, கலாநிதி தாரிக் சுவைதான், கலாநிதி ஹாதிம் அப்துல் அஸீம் மற்றும் அல்லாமா ஹஸன் வாலத்தெது ஆகியோரின் கருத்துகளை படிக்கலாம். பாரம்பரிய அறிஞர்கள் இந்த குர்ஆனிய வாக்குறுதியை வித்தியாசமாக விளக்கினர், ஏனெனில் இஸ்ரேல் என்ற ஒரு சக்திவாய்ந்த நாடு உருவாவதை அவர்களால் அப்போது கணிக்க முடியவில்லை.
ஸூரா இஸ்ராவின் 4-8 வசனங்கள் வழங்கும் சுருக்கமான பார்வை, பனூ இஸ்ரவேலர்களின் முதல் மற்றும் இரண்டாவது பெரும் குழப்பமும் வரம்பு மீறலும் பற்றிய தெளிவான கருத்துக்களை உருவாக்குவதற்கான முக்கிய அடிப்படையாகும். அவர்களின் முதல் வரம்புமீறல் அல்லாஹ்வின் அடியார்களைக் கொண்ட ஒரு வலிமைமிக்க சக்தியால் அடக்கப்பட்டது. இங்கு நமது தலைப்புக்குப் பொருத்தமானது அவர்களின் இரண்டாவது வரம்புமீறல். கொடுங்கோண்மை சக்தி, ஆதிக்கம், செல்வம் மற்றும் குழந்தைகள், உறுதியான தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் உலகளாவிய செல்வாக்கை எவருக்கும் இல்லாத எண்ணிக்கையில் பெற்றுள்ளமை என்ற அதன் அனைத்து பண்புகளையும் நாம் இஸ்ரேலில் நடைமுறையில் காண்கிறோம். இந்த வசனங்களின் முடிவில் அல்லாஹ் அவர்களின் வீழ்ச்சியைப் பற்றி முன்னறிவிக்கிறான். இது கொடுங்கோண் மையின் இயற்கையான விளைவு இப்படித்தான் அமையும் என்பதை நிரூபிக்கிறது.
Dr மகாதிர் முஹமது தலைமை தாங்கும் கோலாலம்பூர் சிந்தனை மற்றும் நாகரிக மன்றத்தின் (Kuala Lumpur Forum for Thought and Culture) பொதுச் செயலாளர் அப்துல் ரசாக் மக்ரி கூறுகையில்,
அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த அல் அக்ஸா பிரளயம் , அரபு ஆட்சிகள் சியோனிச அரசுடன் உறவை இயல்பாக்குவதற்கு (Normalization) போட்டியிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக தலையீடு ஆகும். பலஸ்தீன பிரச்சினையை இஸ்ரேலின் பிரத்தியேகப் பிரச்சினையாக மாற்றி எந்த வித வெளிநாட்டு தலையீடும் இல்லாமல் உள்நாட்டில் தீர்க்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முயற்சியே இந்த இயல்பாக்கல் .
மனித முயற்சிகள் அனைத்தும் முற்றிலும் சக்தியற்றதாகி, கொடுங்கோண்மை எல்லை தாண்டும் போது, தெய்வீக தலையீடு முக்கியமான சூழ்நிலைகளில் வருகிறது. அல் அக்ஸா பிரளயம் இஸ்லாமிய அடையாளச் சின்னங்களை ஏலமிடும் இந்த மோசமான வணிகக் கூட்டத்திற்கு ஒரு தீர்க்கமான அடியை அடித்து, பலஸ்தீன் பிரச்சனையை உலக அரங்கிற்கு மீண்டும் கொண்டு சென்றது. அல் அக்ஸா ஒரு புனிதமான நம்பிக்கைச்சொத்து, வரலாறு முழுவதும் சில மனிதர்கள் விற்றுத் தீர்க்க சதி செய்தபோது அதைப் பாதுகாக்க தெய்வீக தலையீடு வந்தது. காஸா இனப்படுகொலை மிகவும் வேதனையானதுதான், எனினும், இயற்கையாகவே வரலாற்றில் பெரிய மாற்றங்கள் இப்படித்தான் நிகழ்கின்றன. இங்கே பாருங்கள்: “மேலும், எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம்.” (அல் கஸஸ்:5). நபி மூஸா (அலை) அவர்களின் தலைமையில், பனு இஸ்ரேலை ஃபிர்அவ்னின் கொடுங்கோண்மையிலிருந்து விடுவிப்பது மற்றும் அவர்களுக்கு பூமியில் அதிகாரமளிப்பது பற்றி இவ்வசனங்கள் பேசுகின்றன. கொடுங்கோண்மையை தொடர்ந்து விடிவு வரும் என்ற ஸுன்னதுல்லாஹ்வை இது எடுத்தியம்புகிறது.
கொடுங்கோண்மைக்கு முடிவு என்பது சுதந்திரம் என்றிருந்தாலும் காஸா இனப்படுகொலையின் முடிவு அல் அக்ஸாவின் உடனடி விடுதலைக்கு வழிவகுக்காது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அது தவிர்க்க முடியாமல் நடக்கும், எனினும் அல்லாஹ் தனது சொந்த திட்டத்தின்படியே நிகழ்வுகளை இயக்குகிறான். விசுவாசிகளின் நெஞ்சங்களைக் குளிரச் செய்கின்ற அதன் சில அடையாளங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்:
- இஸ்ரேலிய சமூகத்தில் ஒரு பயங்கரமான எரிமலை வெடித்து வருகிறது, அதன் மையப்பகுதி ஏற்கனவே அழுகிவிட்டது. இஸ்ரேலின் உண்மையான நிறுவனர்கள் என்று கூறிக்கொள்ளும் மேற்கு ஐரோப்பிய வம்சாவழி டெல் அவிவ்வை தளமாகக் கொண்ட மதச்சார்பற்ற சியோனிசத் தலைமைக்கும், மற்றும் தற்போதைய அரசாங்கத்தை தங்கள் அழுங்குப் பிடியில் வைத்திருக்கும், கடவுள் வாக்குறுதியளித்த நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் மிகவும் வெறித்தனமான, ஜெருஸலமை தளமாகக் கொண்ட கிழக்கு ஐரோப்பிய மற்றும் சோவியத் யூனியன் வம்சாவழியான கடும்போக்குவாத யூத தலைமைக்கும் இடையிலான பிளவு ஆபத்தான அளவில் விரிவடைந்துள்ளது. காஸா போரில் இஸ்ரேலின் ஈடுபாடு ஒரு முழுமையான உள்நாட்டுப் போரை தற்காலிகமாக மட்டுமே ஒத்திவைத்துள்ளது, அது முடிந்ததும் அதிக தீவிரத்துடன் மீண்டும் தொடங்கும். தற்போதைய அரசாங்கத்தின் கழுத்தை நெரித்துக் கொண்டுள்ள நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்கவிர்ரும் உணர்ச்சிவசப்பட்ட அவசரக்காரர்கள் மட்டுமல்ல, அவர்கள் ஷைத்தானின் இரண்டு கொம்புகள். இஸ்ரேலின் சொந்த நீதிமன்றங்களால் தண்டனை பெற்ற இந்த இரண்டு குற்றவாளிகளும் நெதன்யாகுவுடன் சேர்ந்து, தங்கள் சொந்த அரசியல் பிழைப்புக்காக புலிவாலைப் பிடித்ததைப்போல் இனப்படுகொலை செய்தே ஆகவேண்டித் தவிக்கிறார்கள். இருண்ட எதிர்காலம் குறித்து முன்னாள் பிரதமர் யஹுத் பராக் எச்சரிக்கிறார்: “இன்று இஸ்ரேலுக்கு ஒரே ஒரு அச்சுறுத்தல் மட்டுமே உள்ளது என்று கூறி நான் முடிக்கிறேன், நமது வரலாற்றின் இயல்பு மற்றும் வலிமையின் வெளிச்சத்தில் நோ க்கும்போது நமது இருப்பு அச்சுறுத்தப்படுகிறது. உள் நெருக்கடி, உள் பிளவு மற்றும் யூதர்களிடையே வளர்ந்து வரும் வெறுப்பு, ஆண்டுதோறும் மோசமடையும் கட்டுப்பாடற்ற தூண்டுதல், வெறித்தனம் மற்றும் பிரிவுவாதம்தான் அவை.” (8 ஏப்ரல் 2022- https://www.yediot.co.il ). இப்போது 2025 இல் எச்சரிக்கை மணிகளை அடிக்கும் இஸ்ரேலிய நிபுணர்கள் பெருகிவிட்டனர். தற்போதைய தலைமுறை பென்குரியனின் தலைமுறையின் மனப்பான்மையிலிருந்தும் அர்ப்பணிப்பிலிருந்தும் வெகு தொலைவில் உள்ளது, அதன் வாழ்க்கை முறை தியாகங்கள் குறைந்து சொகுசு நிரம்பியதாக உள்ளது.
- பல முனைகளில் சண்டை பிடிப்பது இஸ்ரேலிய பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது . 2025 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை போர் 41 பில்லியன் டாலர்களை உறிஞ்சியுள்ளது. ஏப்ரல் 2025 இல் நடந்த ஈரானுடனான கேலிக்கூத்து மட்டுமே 28 பில்லியன் டாலர்களை விழுங்கியுள்ளது. பெரும்பாலும் டெல் அவிவை தளமாகக் கொண்ட மதச்சார்பற்ற யூதர்களுக்குச் சொந்தமான மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜெருஸலமை தளமாகக் கொண்ட வெறித்தனமான ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்காக பாதுகாப்பான நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளன. அதி உன்னத சக்தி வாய்ந்ததாக இஸ்ரேல் பெருமை கொள்ளும் சுமார் 250 மெர்காவா டாங்கிகள் காஸாவில் லேசான ஆயுதங்களால் அழிக்கப்பட்ட பிறகு வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடையே நற்பெயரை இழந்து வருகிறது. இஸ்ரேலிய இராணுவம் ரிசர்வ் ( போர்க்காலத்தில் மட்டும் பணிபுரியும்) படையினரை பெரிதும் சார்ந்துள்ளது. அவர்களில் 300,000 பேரை அதிக விலைகொடுத்து இந்தப் போருக்கு ஆட்சேர்ப்பு செய்தது. ஜெர்மனியை தளமாகக் கொண்ட யூத பொருளாதார நிபுணர் கலாநிதி ஷிர் ஹெவர் இதை “நடைப்பிண பொருளாதாரம்” என்று வர்ணிக்கிறார்.
- ஸூரா இஸ்ரா, வசனம் 7, பனீ இஸ்ரேலின் இரண்டாவது பெரும் குழப்பத்தின் போது அவர்களின் முகங்களை சிதைப்பது பற்றிப் பேசுகிறது. தற்போது இஸ்ரேலிய கட்டுக்கதைக்கு எதிராக உலகம் திரும்பியுள்ள நிலையில், அதன் வியத்தகு வெளிப்பாடு இப்போது எல்லா இடங்களிலும் தோன்றுகிறது. உலகளவில் மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் உளவியல் ரீதியாக பயனுள்ள புதிய ஊடக பிரச்சாரங்களுக்கு முன்னால் இஸ்ரேல் ஊடகப் போரில் கேவலமாக தோல்வியுற்றுள்ளது. அமெரிக்க முஸ்லிம் சமூகம் டிரம்பிற்கு வாக்களிப்பதன் மூலமோ அல்லது வாக்களிப்பதை தவிர்ப்பதன் மூலமோ ஜோ பைடனை தோற்கடிப்பதற்கான மூலோபாய ரீதியாக புத்திசாலித்தனமான முடிவை எடுத்ததால், டொனால் டிரம்பின் வெற்றியில் காஸா குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தில் இஸ்ரேலுக்கு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவை கேள்விக்குள்ளாக்கும் முஸ்லிமல்லாத இளைய தலைமுறையினர் ஆட்சி மாற்றத்தில் பெரும் பங்களிப்பை வழங்கினர். டிரம்பின் சியோனிஸம் எந்தவகையிலும் தரம் குறைந்தல்ல, ஆனால் அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பலஸ்தீன பிரச்சினை வாக்காளர்களில் செல்வாக்கு செலுத்துவதில் மையப் பங்கைக் கொண்டிருந்தது. இது இஸ்ரேலை கடுமையாக கவலைக்குள்ளாக்கியது. இந்த போக்கு எதிர்கால தேர்தல்களில் மென்மேலும் தீவிரமாக அதிகரிக்கும். இஸ்ரேலுக்கு குருட்டு ஆதரவை வழங்கும் விடயத்தில் டிரம்பின் வாக்காளர் தளமான MAGA (Make America great Again ) அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்) இயக்கத்துக்குள் விரிசல் தலைதூக்கியுள்ளது, அதிலுள்ள பல மில்லியன் கணக்கான ஆதரவாளர்கள் கொண்டுள்ள மிகவும் செல்வாக்கு மிக்க பொ ட்காஸ்டர்கள் மற்றும் புகழ்பெற்ற கருத்துச் செல்வாக்குள்ள தலைவர்கள் இஸ்ரேலை பகிரங்கமாக துணிந்து விமர்சிக்கிறார்கள். இந்தப் போக்கு இதற்கு முன்பு நினைத்துப் பார்க்க முடியாததாகவும், சியோனிஸ்டுகளுக்கு ஒரு பயங்கரமான சாவு மணியாகவும் இருக்கிறது.
- போர்க்குற்றங்களுக்காக நெதன்யாகுவும் அவரது சில இராணுவ உயர் அதிகாரிகளும் ஐ.சி.சி க்கு முன்னால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அறியாமையின் விளைவாக மட்டுமே இந்த முன்னொருபோதும் நடக்காத முன்னேற்றங்களை ஒருவர் குறைத்து மதிப்பிட முடியும்.
- கொடூரமான அசாத் சர்வாதிகாரத்திலிருந்து சிரியா விடுதலை பெற்றது ஒரு மகிழ்ச்சியான சுபசோபனம், அல் அக்ஸாவின் விடுதலைக்கான பாதையில் ஒரு பெரிய தடையை அது அகற்றியுள்ளது. பல ஹதீஸ்கள் ஷாமின் விடுதலையை அருள்பாலிக்கப்பட்ட அல் அக்ஸாவின் சுதந்திரத்திற்கு முன்னோடியாக முன்னறிவிக்கின்றன. அதன் தற்போதைய தலைமை கடைப்பிடிக்கின்ற, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பரந்த முஸ்லிம் உலகத்துடன் புதிய அத்தியாயங்களைத் திறப்பது உட்பட, அனைவரையும் அரவணைக்கும் அணுகுமுறை மூலம் அவர்களின் அரசியல் புத்திசாலித்தனத்தை நிரூபித்துள்ளது.
- ஈரானின் வலிமையான பதிலடி இஸ்ரேலின் முழுநிர்வாண நிலையை அப்பட்டமாக அம்பலப்படுத்தி, அதன் தலைவர்களை கதிகலங்க வைத்துள்ளது. வரலாற்றில் முதல்முறையாக, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலின் அனைத்து மூலோபாய பகுதிகளையும் அடைந்து பேரழிவு தரும் தாக்கங்களை ஏற்படுத்தி, கடுமையான மன வலியை ஏற்படுத்தின. ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலின் சார்பாக தலையிட்டு மத்தியஸ்தர்கள் மூலம் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- “எட்டாவது தசாப்தத்தின் சாபம்”: இது இஸ்ரேலிய தத்துவஞானிகள் மற்றும் வரலாற்றாசிரியர்களிடையே ஆழமாக வேரூன்றிய ஒரு நம்பிக்கையாகும், மேலும் 2028 ஆம் ஆண்டில் நாடு அதன் எட்டாவது தசாப்தத்தை நெருங்கும் வேளையில், சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ள பயங்கரமான உள் பிளவுகளைக் கருத்தில் கொண்டு சமீபத்திய ஆண்டுகளில் பெரும் அச்சங்களைத் தூண்டியுள்ளது. வரலாற்று ரீதியாக யூதர்களுக்கு தாவீது இராச்சியம் மற்றும் ஹாஸ்மோனியன் இராச்சியம் என இரண்டு அரசுகள் இருந்தன. மூத்த அரசியல் விமர்சகர் மெனாஹெம் ரஹத் இரு அரசுகளும் வெளிப்புறத் தாக்குதல்களால் அல்ல, யூதர்களின் உள் மோதல்களால் சிதைந்தன என்று கடுமையாக வாதிடுகிறார். (https://mizrachi.org/hamizrachi/the-curse-of-the-eighth-decade/)
பிரதான ஊடகங்கள் மற்றும் ஆர்வக் குழுக்களால் வரையப்பட்ட இளஞ்சிவப்புப் படத்திற்குக் கீழே, இஸ்ரேலியர்களின் இதயங்களை முகம் சுளிக்க வைக்கும் ஒரு கொடூரமான விரக்தி ஓடை ஓடுகிறது. முன்னாள் புலம்பெயர் விவகார அமைச்சர் நாச்மன் ஷாய் புலம்புகிறார்: “2025 இல் இஸ்ரேலைப் பார்க்கும் எவரும் யூதப் போர் மாதிரி-2.0 இன் மேம்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைக் காண்கிறார்கள் (மாதிரி 1.0 என்பது ஆக்கிரமிப்பாளர்களுடனான போர் மற்றும் 2.0 என்பது உள்நாட்டுக் கலவரம்). லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் இரவில் தூங்குவதில்லை… ஏனென்றால் அவர்கள் தங்கள் மகன்கள் மற்றும் மகள்கள், பேரன்கள் மற்றும் பேத்திகள் பற்றி உண்மையிலேயே கவலைப்படுகிறார்கள். சுருக்கமாக, வீட்டிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் (காஸாவில்) மரண ஆபத்தில் இருக்கும் (யுத்தம் புரியும்) அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து கவலைபடுகிறார்கள். காஸா, லெபனான், சிரியா…… என நமக்கு வேறு என்ன காத்திருக்கிறது என்பது யாருக்குத் தெரியும்…! இஸ்ரேல் அரசிலிருந்து ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் மனித மற்றும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் திறந்த முனைகள். தூக்கம் கலையாத ஒரே நபர்கள் அரசாங்க உறுப்பினர்கள் மட்டுமே…” (மாரிவ் செய்தித்தாள், 16 ஆகஸ்ட் 2025).
காஸா இனப்படுகொலை என்பது முழு முஸ்லிம் உம்மத்திற்கும் ஒரு உண்மையான தெய்வீக சோதனை. ஷஹீதான ஒவ்வொரு ஆன்மாவும், தங்களால் இயன்ற அளவில் அதைத் தடுப்பதில் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறிய அனைவரையும் பற்றி அல்லாஹ்வின் முன் சாட்சியமளிக்கும். எனவே, மற்றவர்களின் குறைகளைப் பார்ப்பதற்கு முன்பு ஒவ்வொருவரும் தாங்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். பிறப்பதற்கு முன்பே மரணம் விதிக்கப்பட்டிருப்பதால், அநியாயமாக கொலை செய்யப்பட்டவர்கள் உயர்ந்த சொர்க்கத்தில் வாழ்கிறார்கள், தங்கள் இரக்கமுள்ள இறைவனிடமிருந்து வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள் என்பது எங்கள் வலுவான நம்பிக்கை. அநியாயக்காரர்களையும் தீயவர்களையும் பொறுத்தவரை, அவமானம் அவர்களின் உலக விதி, மரணத்திற்குப் பிறகு நித்திய நரகத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை காத்திருக்கிறது.
தலைவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நிறுத்த முடியுமென்றிருந்தால், வியட்நாமியர்களும் லிபியர்களும் ஒருபோதும் சுதந்திரத்தை அடைந்திருக்க மாட்டார்கள். ஈமானிய பலத்தால் மங்கோலியர்களின் பக்தாத் படையெடுப்பு போன்ற மோசமான தோல்விகளில் இருந்து முஸ்லிம் உம்மா தப்பிப்பிழைத்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியும் ஜப்பானும் மீளவும் கட்டியெழுப்பப்பட்டது போல, எஃகு மனப்பான்மை கொண்ட மக்களால் காஸா மீண்டும் கட்டப்படும்.
“தூய்மையானவன் எங்கள் இறைவன்; அவனுடைய வாக்குறுதி நிச்சயம் நிறை வேற வேண்டியிருந்தது.” (ஸூரா அல் இஸ்ரா: 108).
ஆஸிம் அலவி
எழுத்தாளர், இஸ்லாமிய நாவலாசிரியர்
asimalav@yahoo.com