ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஒழுக்கக் கேட்டைத் தவிர்க்கும் முயற்சி எனக் கூறி ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தடை விதித்திருப்பதாக தலிபான் அரசு கூறியுள்ளது. இதன் விளைவாக ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 இல், அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஆட்சி அமைத்த தலிபான்கள், முதன்முறையாக இப்படியொரு தடையை விதித்துள்ளனர். இதனால், ஆப்கானிஸ்தானின் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் இல்லங்களில் வைஃபை இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், செல்போன் வாயிலான இணைய சேவைகள் இயக்கத்தில் உள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 16 ஆம் திகதி, முதலில் வடக்கு பால்க் மாகாணத்தில் வைஃபை இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களான பாக்லான், படாக்ஷான், குண்டுஸ், நான்கார்ஹர் மற்றும் தகார் ஆகிய மாகாணங்களில் நேற்று (18) முதல் இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதை குண்டுஸ் மாகாணத்தின் ஆளுநர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.