சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 09 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 வயது மாணவர் முகமது சுஹைல், கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 15 அவர் பிணையில் விடுக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணை கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
முஹம்மது சுஹைலின் சார்பாக ஆஜரான சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி இல்ஹாம் ஹசனலி, விசாரணைகளில் குற்றத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் தனது கட்சிக்காரரை விடுவிக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, முஹம்மது சுஹைலை பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டார்.