-கலாநிதி ரவூப் செய்ன்
முஸ்லிம் பாடசாலைகளின் கல்வித்தரம் எப்படிப் போனாலும் ஒழுக்கத் தரத்தைப் பாதுகாப்பதே பெரும் சவாலாகியுள்ளது.
இன்றைய நாட்களில் நம்மை எல்லாம் திடுக்கிட வைக்கும் ஒரு செய்தி ஐஸ்போதைப்பொருளின் பரவல் பற்றியது. அது இன்று பாடசாலை மாணவர்களை நன்கு திட்டமிட்டு இலக்கு வைக்கின்றது என்ற செய்தி நம்மை மயிர்க்கூச்செறிய வைக்கிறது.
இன்று நான் திஹாரியில் சலூனிற்குச் சென்றிருந்த வேளை எனக்கு அடுத்ததாக முடி வெட்டுவதற்காக காத்திருந்த ஓர் இளைஞன் சலூன் உரிமையாளருடன் பகிர்ந்துகொண்ட அனைத்தையும் நானும் அமைதியாக உள்வாங்கிக்கொண்டேன்.
அந்த இளைஞன் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி மூன்று நாட்களுக்கு முன்னர்தான் வெளியே வந்துள்ளான். தற்போது மஹர சிறைச்சாலையில் திஹாரியைச் சேர்ந்த சுமார் 25 இளைஞர்கள் இதே குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என அவன் கூறினான்.
ஆனால் தனது கைது அநியாயமானது என்று சாதித்த அவன் ஐஸ்போதை பாடசாலை மட்டத்தில் கடுமையாகப் பரவி வருவதாகவும் கூறினான்..
முஸ்லிம் பாடசாலைகளில் சாதாரண தரம் கற்கும் மாணவர்கள் மத்தியில் ஐஸ் போதை வெகுவாக பரவி வருகின்றது என்பதை நிரூபிக்கும் சம்பவக்கற்கைகள் ஏராளம் உள்ளன.
தலைநகரில் உள்ள சில பெண்கள் கல்லூரியிலும் ஏன் சில அறபு மத்ரஸாக்களிலும் கூட இத்தகைய ஐஸ் பாவனை மாணவர்களிடையே திட்டமிட்டு சில சக்திகளால் வினியோகிக்கப்பட்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது.
சில பாடசாலைகளில் இந்த இந்த மாணவர்கள்தான் ஐஸ் போதையை பாவிக்கின்றர் என்று சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டும் அந்த குறிப்பிட்ட மாணவர்களை அதிபர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்தும் பாதுகாத்து வருவதான தகவல்களும் வெளிவந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இது மிக மோசமான அசட்டைத்தனமா அல்லது இவர்களுக்கும் இதில் ஏதோ சம்பந்தம் உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் ஒரு மகப்பேற்று மருத்துவர் என்னிடம் தொலைபேசி வழியாக பகிர்ந்துகொண்ட செய்தியும் நம்புவதற்கரிதானது.
ஆனால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும். இன்றைய இளம் முஸ்லிம் தம்பதிகளின் சிலர் குறிப்பாக கணவன்மார் தமது மனைவிமாருக்கு வேண்டுமென்றே ஒருவகை ஐஸ் போதைப்பொருளை வழங்கி அவர்களை அதற்கு அடிமையாக்குகிறார்கள்.
அதன் நோக்கம் அவர்களை அசாதாரணமான பாலியல் வேட்கைக்கு ஆளாக்காவதாகும் என அவர் கூறினார்.அவரிடம் மருத்துவத்திற்காக வந்திருந்து சில பெண்களிடமிருந்தே இந்தத்தகவலை அவர் பெற்றுள்ளார்.
ஒருபுறம் போதை வீட்டு வன்முறையை ஊக்குவிக்கின்றது.மறுபுறம் அதை இளைஞர்கள் தமது இளம் மனைவியரை விகாரமான பாலுறுவுக்கு தயார்படுத்த துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.
இந்த சமூக அவலம் வரவாற்றில் என்றென்றைக்கும் இல்லாத அளவு நீட்சி அடைவது பற்றிய ஆழமான சமூக அக்கறை நமக்கு அவசியமாகிறது. இதனை சில ஆசிரியர்கள் போல் சில அதிபர்கள் போல் நாம் எளிதில் கடந்து செல்ல முடியாது.
ஏலவே ஆண் பிள்ளைகள் கற்கிறார்கள் இல்லை . உயர்தரம் வரை தொடர்கிறார்களில்லலை. பல்கலைக்கழக நுழைவு அனுமதியில் வெறும் 30 விழுக்காடே ஆண்கள்.
எஞ்சியதெல்லாம் பெண்கள் என்று கவலை வெளியிடப்படும் தருணத்தில், மாணவர்கள் இளைஞர்கள் இப்படி ஐஸ் போதைப்பொருளுக்குப் பின்னால் படையெடுத்தால் இந்த சமூகத்தின் எதிர்காலம் என்னவாகும்? ஒழுக்கம் என்னவாகும்.
இன்றைய நாட்களில் நாம் குழந்தைகளை சரியாகத்தான் வளர்க்கின்றோமா என்பது மற்றொரு முக்கிய கேள்வி
சில படித்த, இஸ்லாமிய தஃவாவில் ஈடுபாடுள்ள, உயர் அரச பதவிகளில் அமர்ந்துள்ளவர்கள் கூட கோட்டை விடும் முக்கிய புள்ளி இந்த பிள்ளை வளர்ப்புதான் என்பதையும் நிறுவும் சோகமான சம்பவங்கள் பல சமூகத்தில் மலிந்து வருவதை நாம் அவதானிக்கலாம்.
ஐஸ் ஒவ்வொரு வீட்டின் உள் அறைக்கதவையும் தட்டிக்கொண்டிருக்க பெற்றோர் எங்கோ வேறோர் உலகத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
யா அல்லாஹ் இந்தப்பாவத்தை அசட்டை செய்யாமல் எங்கள் பிள்ளைகளை உண்மையான ஆன்மீகத்துடன் வளர்க்க எங்களுக்கு வழிகாட்டுவாயாக!