2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல எனவும், சமீபத்தில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சுதந்திரமாக இந்தியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் அறிவிக்கப்பட்ட குடிநுழைவு, வெளிநாட்டினர் சட்டத்தில் இடம்பெற்றுள்ள தண்டனை விதிகளிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இயற்றப்பட்ட குடிநுழைவு, வெளிநாட்டினர் சட்டம் 2025, கடப்பிதழ் அல்லது செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினர் நுழைவதையும் தங்குவதையும் தண்டனைக்குரிய குற்றமாக வகைப்படுத்துகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூ. 5 லட்சம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
முன்னதாக, 2015 ஜனவரி 9க்கு முன்னர் இந்தியாவில் அடைக்கலம் புகுந்த மற்றும் தாமாக முன்வந்து இலங்கை திரும்ப விரும்பும் இலங்கை அகதிகளுக்கு, விசா கட்டணத்தையும் விசா இன்றி நீண்ட காலம் தங்கியிருந்ததற்கான அபராதத்தையும் உள்துறை அமைச்சு தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.