ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 250 பேர் பலியானதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் பதிவான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.0 என பதிவாகியிருந்ததாகவும், அடுத்தடுத்து 4.5 ரிக்டர் அளவில் பதிவானதாகவும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணம்தான், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இங்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்றும் ஏராளமானோர் காயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதால் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டடங்களின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒரே கிராமத்தில் 30 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானின், நகங்கர் மாகாணத்தில் ஜலாலாபாத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் நேரிட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் கட்டட இடிபாடுகளால் சூழப்பட்டிருப்பதால், மீட்புக் குழுவினர் நுழைய முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் வந்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலை வழியாக மருத்துவமனை கொண்டு வர முடியாதவர்களை வான் வழியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மீட்புப் பணியில் பாதுகாப்புப் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் நேரிட்ட நிலநடுக்கத்தால் ஆயிரம் பேருக்கும் மேல் பலியான நிலையில், இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முன்னணி இடம் வகிக்கிறது.