வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (01) யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார்.
ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த அபிவிருத்தி திட்டங்கள் அங்கு அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளன.
இன்றையதினம் (01) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் மூன்றாம் கட்டப் பணிகளையும் ஆரம்பித்துவைக்கவுள்ளார். யாழ். பிரதேச செயலகத்தில் இந்த அலுவலகம் திறக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், மண்டைதீவுப் பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள நவீன கிரிக்கெட் மைதானத்தின் பணிகளுக்கான அடிக்கல் நடுகையும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை நாளையதினம் (02) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முல்லைத்தீவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு வட்டுவாகல் பாலத்தின் புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் உட்கட்டமைப்பு மேம்படுத்தல் திட்டத்தின் ஒரு அங்கமாக, தென்னை முக்கோண வலயத்தின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு, உலக தெங்கு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் ‘கப்துரு சவிய’ தேசிய வேலைத் திட்டத்தை புதுக்குடியிருப்பு கந்தசாமி கோவில் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.