இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க வெல்லலகே, தனது 54 ஆவது வயதில் நேற்று (18) காலமானார்.
அதே நாளில் துனித் வெல்லலகே அபுதாபியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கிண்ண குழு நிலைப் போட்டியில் பங்கேற்றிருந்தார்.
நேற்றிரவு போட்டி முடிந்த பின்னரே 22 வயதான வெல்லலகே இந்த துயரச் செய்தியைப் பெற்றார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவர், அணி முகாமையாளர் மஹிந்த ஹலங்கோடாவுடன் அபுதாபியில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளார்.
துயரச் செய்தியைக் கேட்டதும் உணர்ச்சிவசப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா கண்ணீர் மல்கக் காணப்பட்டார், பின்னர் வெல்லலகேயை ஆறுதல்படுத்த நேரத்தைச் செலவிட்டார். இதனால் வெற்றி மகிழ்ச்சியில் இருந்த இலங்கை அணியினரின் மனநிலை மாறியது.
தங்கள் குழுவில் முதலிடத்தைப் பெற்றுத் தந்த ஒரு முக்கியமான வெற்றியின் பின்னர் வீரர்கள் அமைதியாக மைதானத்தை விட்டு வெளியேறினர். சோகமான செய்தியால் அவர்களின் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன.