அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து…
“மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்” எனும் கருப்பொருளில் அமைந்த ‘மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு’ இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் தற்போது தற்போது நடைபெறுகிறது.
இதில் பங்குபற்ற இலங்கையிலிருந்து என்னுடன் இலங்கையின் மெதடிஸ் சர்ச்சின் தலைவர் பாதர் கிங்ஸ்லி வீரசிங்க, கெகிராவே சுதஸ்ஸனா தேரர் ஆகியோரும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
17-19.09.2025 ஆகிய தினங்களில் நடக்கும் இக்கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில் இந்தோனேசிய மதவிவகார அமைச்சர் பேராசிரியர் நஸ்ருத்தீன் ஒமர் கலந்து கொண்டார்.
பங்களாதேஷ், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான்,திமோர், மியன்மார், தாய்லாந்து கம்போடியா, பிலிப்பைன்ஸ், இலங்கை ஆகிய ஆசிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து,பெளத்தம்,சீக்கியம், கன்பூசியஸிம் போன்ற மதங்களைச் சேர்ந்த சுமார் 70 மதத் தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
இந்த நாடுகளில் சிறுபான்மையினருக்கு அவர்கள் வாழும் நாடுகளது சட்டயாப்புக்களில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள்,அவற்றுக்கான காரணங்கள், எதிர்காலத்தில் அவற்றை தவிர்த்து சமாதான சகவாழ்வை மேற்கொள்வதற்கான வழிவகைகள் போன்ற முக்கிய விடயங்கள் பற்றிய உரைகளும் கருத்தாடல்களும் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்வில் Freedom of Religion and Rights of Religious Minorities in Sri Lanka – An Islamic Perspective- “இலங்கையில் மத சுதந்திரமும் சிறுபான்மை சமூகத்தினரது மத உரிமைகளும் – ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தும் படி பணிக்கப்பட்டதால் அதனை முடிந்தவரை சிறப்பாக முன்வைக்க முடிந்தது. கருத்தரங்கின் இறுதி பிரகடனத்தை தயாரிக்கும் குழுவில் ஒருவராக கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள் தெரிவு செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
பல வித்தியாசமான நம்பிக்கைகளையும் கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் கொண்ட வித்தியாசமான நாடுகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் ஆய்வாளர்களை சந்திக்கவும் கருத்துக்களை பரிமாறவும் சந்தர்ப்பம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சமாதான சகவாழ்வு, இன நல்லுறவு, ஐக்கியம் ஆகியவற்றை இந்த நாட்டில் ஏற்படுத்த உழைக்கும் முஸ்லிம், மற்றும் முஸ்லிம் அல்லாத சமூக செயற்பாட்டாளர்களது முயற்சிகளில் ஏலவே ஓரளவு சம்பந்தப்பட்ட அனுபவம் இருப்பதால் அல்லாஹ்வின் அருளால் இந்த நிகழ்வு அந்தவகையான முயற்சிகளை சிறுபான்மையாக நாம் வாழும் நமது நாட்டிலும் மேலும் அதிகமாக திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்ற உற்சாகத்தைத் தந்தது.
இலங்கையில் இருந்து வருகை தந்த இருவருடனும் கலந்துரையாடியதில் இலங்கையில் இன ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்கான பலமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது.
மத உணர்வு என்பது ஒவ்வொருவரைப் பொறுத்தவரையில் மிக கூர்மையானது. அது மிக கவனமாகக் கையாளப்படாத போது பயங்கரமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை கருத்தரங்கில் பரிமாறப்பட்ட கருத்துக்கள் வாயிலாக அறிய முடிந்தது. மத உரிமையை ஒவ்வொரு மதத்தவரும் தமது உயிரைப் போல் கருதுகிறார்கள்.
எனவே அரசியல் வாதிகளும், யுத்த தளபாடங்களை உற்பத்தி செய்வோரும், பொருளாதார நலன்களை அடைந்து கொள்ள தீவிரமாக செயல்படுவோரும் சாதாரண மக்களது மத மற்றும் இன உணர்வுகளுடன் விளையாடி இன மோதல்களையும் வன்முறைகளையும் தோற்றுவிக்கிறார்கள்.
மதங்களை பிழையாக விளங்கியிருப்போர் இதற்கு தம்மை அறியாமலேயே துணை போகின்றார்கள்.
கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்த்தால் இலங்கையில் தற்போது நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இனவாதத்தை மழுங்கடித்து அனைத்து இனத்தவரையும் ஒற்றுமையாக வாழச் செய்வதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பிக்ஹுல் அகல்லிய்யாத் எனப்படும் சிறுபான்மையினராக வாழும் பொழுது எவ்வாறு ஒரு நாட்டில் வாழ வேண்டும் என்ற அறிவும் பிற சமயத்தவர்களது தனித்துவங்கள் நம்பிக்கைக் கோட்பாடுகள் பற்றிய அறிவும் அவசியப்படுகிறது.
யுத்தங்களும் இனக்கலவரங்களும் வெறுப்புப் பிரச்சாரங்களும் அற்ற நாடாக இலங்கை திகழ எம் அனைவரதும் பங்களிப்பு அவசியமாகும்.
அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக!