கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 28 சதவீதமானோர் மார்பகப்புற்று நோயாளர்களாவர்.
அந்தவகையில் நாளாந்தம் சுமார் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதோடு துரதிஷ்டவசமாக நாளாந்தம் 3 பேர் மார்பகப்புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்பட உள்ள மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதன்கிழமை (24) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாரிய சுகாதார பிரச்சினையாக உள்ள மார்பகப்புற்று நோய் தொடர்பில் ஒக்டோபர் மாதம் முழுவதும் பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மார்பகப்புற்றுநோய் தொடர்பில் வீன் அச்சம் கொள்ளத் தேவையில்லை நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சைகளை பெறுவதன் மூலம் நோயை முழுமையாக குணப்படுத்தலாம்.
எனினும் நாட்டில் நோய் நிலைமையின் பிந்திய நிலையிலேயே மார்பக புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவது வருத்தத்துக்குரிய விடயமாக உள்ளது.
நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 15 மார்பகப்புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதுடன், 3 பேர் மரணிப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் மார்பகப்புற்றுநோய் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி எவலொக்சிட்டி மாலில் விசேட கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் விசேட வைத்தியநிபுணர்களும் நோய் தொடர்பில் மேலதிக விழிப்புணர்வுகளை வழங்க உள்ளனர் என்றார்.