இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி நான்கு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயமானது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவதை எடுத்துக்காட்டுகிறது.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கை கடற்படை தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பனகொடா உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அட்மிரல் திரிபாதி சந்திக்க உள்ளார்.
இதன்போது, கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் முக்கியத்துவம் அளித்து, பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயங்களில் பரந்த அளவிலான இருதரப்பு கலந்துரையாடல்களில் அவர் ஈடுபடுவார்.
‘Maritime Outlook of the Indian Ocean under Changing Dynamics’ என்ற கருப்பொருளின் கீழ் இலங்கை கடற்படை 12 ஆவது முறையாக ஏற்பாடு செய்துள்ள காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டிலும் அவர் பங்கெடுப்பார்.
இந்த நிகழ்வானது செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் வெலிசரவில் உள்ள ‘Wave n’ Lake’ கடற்படை உற்சவ மண்டபத்தில் நடைபெற உள்ளது.
பரஸ்பர மரியாதை, கடல்சார் நம்பிக்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றில் நங்கூரமிடப்பட்ட, காலத்தால் சோதிக்கப்பட்ட இந்தியா – இலங்கை உறவுகளை இந்த விஜயம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.