ஆறு உயிருள்ள வெளிநாட்டு பாம்புகளை கடத்தி வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
பெங்கொக்கிலிருந்து சென்னை வழியாக 6E1173 எனும் இண்டிகோ எயார்லைன்ஸ் விமானத்தில் வந்த 40 வயதுடைய இலங்கைப் பெண் பயணி ஒருவரே இவ்வாறு குறித்த பாம்புகளை கொண்டு வந்துள்ளார்.
குறித்த பெண்ணின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவானது உயிர்ப்பல்வகைமை, கலாசார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட சோதனையில் குறித்த பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், 3 Honduran Milk Snakes, 1 Speckled Kingsnake, 1 Yellow Anaconda, 1 Ball Python ஆகிய பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து பாம்பு இனங்களும் CITES Appendix II இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு செல்லப்பிராணி வர்த்தகத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் காரணமாக சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவையாகுமென, சுங்கத் திணைக்கள பணிப்பாளரும் அதன் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.
குறித்த பாம்புகளை அடையாளம் காணுதல் மற்றும் கையாளுதல் ஆகியவற்றிலான தொழில்நுட்ப ஆதரவை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடியாக வழங்கியுள்ளதோடு, அவற்றை பாதுகாப்பாக கையாள்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் சட்டவிரோத வனஜீவராசிகள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இது எடுத்துக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, சுங்கக் கட்டளைச் சட்டம், விலங்கினங்கள் மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.