இலங்கையில் திரிபோஷா உற்பத்தி கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்தார்.
உற்பத்திக்குத் தேவையான சோளம் கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திரிபோஷா உற்பத்திக்காக 18,000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் முன்னர் வழங்கப்பட்டிருந்தாலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் ஒப்புதலுக்கான திருத்தங்களை முன்வைத்தார்.
அந்த திருத்தங்கள் அடங்கிய புதிய அமைச்சரவை பத்திரம் ஒக்டோபர் 07 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறும் வரை சோள இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஒக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் சோளம் இறக்குமதி மீண்டும் தொடங்கியதும் திரிபோஷா உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றார்.