முன்னாள் ரக்பி வீர் வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் புதிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவரது குடும்பத்தினர் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லாட்சி காலத்தில் நீதிமன்றம் நியமித்த 7 பேரைக் கொண்ட நீதித்துறை மருத்துவ அதிகாரிகள் குழுவினால் வசீம் தாஜூதீன் சித்திரவதை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டதாக அறிக்கை வெளியிட்டது.
கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் தாஜூதீன் வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக அவரது உறவினர் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்ற போது விபத்துக்குள்ளான வாகனத்தின் பயணி ஆசனத்தில் தாஜூதீன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அந்த நிலையில் அவர் உண்மையில் வாகனத்தில் இருந்திருந்தால் அதுபோன்றதொரு சிறிய விபத்தில் உயிரிழந்திருக்கமாட்டார்.
குறித்த காலப்பகுதியில் தாஜூதீன் விபத்தில் உயிரிழந்ததாக மரண அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது தாஜுதீனின் மரணம் பொது மேடைகளில் பேசும் பொருளானாது. தாஜூதீனின் உடலை மீள தோண்டியெடுத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென நல்லாட்சி அரசு தெரிவித்து தம்மிடம் அனுமதி வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து தாஜூதீனின் எரித்து கொலை செய்யப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் குழு அறிக்கை வெளியிட்டிருந்தது.
எவ்வாறெனினும் தமது மருமகனின் மரணத்திற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லையென அவரது மாமா தெரிவித்துள்ளார். 13 வருடங்களின் பின்னர் மீண்டும் வசீம் தாஜூதீனின் மரணம் குறித்தான விசாரணைகளை புதிய முறையில் இந்த அரசாங்கம் ஆரம்பிக்குமென தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.