வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல அமைச்சுக்களின் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 3 ஆவது உறுப்புரைக்கமைய, மக்கள் மீதான மக்கள் இறைமை அதிகாரம் மக்களால் 4 ஆவது உறுப்புரையின் ஏற்பாட்டின் பிரகாரம் தேர்தலின் போது நடைமுறைப்படுத்தப்படும்.
வாக்கு அதிகாரம், தேர்தல் சட்டத்திற்கமைய இலங்கையில் வசிக்கின்ற மற்றும் தேருநர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள பிரஜைகளுக்கு மாத்திரமே உண்டு. சமகால தேர்தல் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்களிப்பதற்கான முறைகளோ அல்லது சட்டங்கள் தயாரிக்கப்படவில்லை.
எனினும் இந்தியா, பங்களாதேசம், பிலிப்பைன்ஸ் போன்ற பல ஆசிய நாடுகளில் தமது வெளிநாட்டிலுள்ள பிரஜைகளுக்கு வாக்களிக்கக்கூடிய வகையில் சட்டங்கள் நடைமுறையிலுள்ளன. இலங்கையிலும் அவ்வாறான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெளிநாட்டிலுள்ள பிரஜைகளின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அல்லது புதிய சட்டத்தைத் தயாரிப்பதற்கான விடயங்களை ஆராய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பொதுநிர்வாக, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் ஏனைய ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் அலுவலர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.