சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியும், மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவருமான ஷேக் அப்துல் அஸீஸ் ஆல்-ஷேக் இன்று (23) காலமானார்.
அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லாஹ் பள்ளிவாசலில் நடைபெறும்.
ஆல்-ஷேக் 1999 இல் பிரதம முப்தி பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் இராச்சியத்தில் மிக உயர்ந்த பதவியில் உள்ள மத அறிஞராகப் பணியாற்றினார், ஷரியா சட்டங்களை விளக்கினார். மற்றும் சட்ட மற்றும் சமூக விஷயங்களில் ஃபத்வாக்களை வெளியிட்டார்.
அவரது மறைவால், அறிவு, இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு சேவை செய்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த ஒரு சிறந்த மேதேயை இஸ்லாமிய உலகம் இழந்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் இஃப்தாவின் பொதுத் தலைவராகவும், முஸ்லிம் உலக லீக்கின் உச்சக் குழுவின் தலைவராகவும் இருந்த ஷேக் அப்துல்அஸீஸ், 1999 ஆம் ஆண்டு, பிரதம முஃப்தி அப்துல்அஸீஸ் பின் பாஸின் மரணத்திற்குப் பிறகு, சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியாகப் பொறுப்பேற்றார்.
நவம்பர் 30, 1943 அன்று மக்காவில் பிறந்த ஷேக் ஆல் ஷேக், எட்டு வயதை அடைவதற்கு முன்பே 1951 இல் தனது தந்தையை இழந்தார்.
அவர் தனியாக வளர்ந்தார், சிறு வயதிலேயே புனித குர்ஆனை மனப்பாடம் செய்தார்.பின்னர் தனது இருபதுகளில் பார்வையை இழந்தார்.
அவர் ஷரியா துறையில் படிப்பைத் தொடர்ந்தார், பல்கலைக்கழகங்களில் கல்வி கவுன்சில்களில் உறுப்பினரானார், மேலும் ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் கதீபாகவும் அரஃபாவில் உள்ள நிம்ரா பள்ளிவாசலில் ஒரு முக்கிய பிரசங்கியாகவும் பணியாற்றினார்.
ஆல் ஷேக் ஷரியா துறையில் ஏராளமான வெளியீடுகளை எழுதியுள்ளார், அவற்றில் ஃபத்வாக்களின் தொகுப்புகள், இஸ்லாமிய கோட்பாடுகள் குறித்த படைப்புகள் மற்றும் சட்டபூர்வமான மற்றும் தடைசெய்யப்பட்ட விடயங்கள் (ஹலால் மற்றும் ஹராம்) பற்றிய புத்தகங்களும் அடங்கும்.
அவரது அறிவார்ந்த பங்களிப்புகளில் அவரது வாழ்க்கை முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்ட ஃபத்வாக்களை தொகுக்கும் புத்தகங்களும் அடங்கும்
மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவி மற்றும் இராச்சியம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் அவருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நடத்தப்பட வேண்டும் என சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் உத்தரவிட்டுள்ளார்.
ஷேக் அப்துல்அஸீஸின் குடும்பத்தினருக்கும், சவூதி மக்களுக்கும்,பரந்த இஸ்லாமிய உலகிற்கும் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் அறிஞர் அப்துல் அஸீஸ் ஆல் சேக் மறைவு குறித்து தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.