1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் அகதி முகாம் வாழ்வில் பல்வேறு சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள், அதேபோல் பல இழப்புக்களையும் சந்தித்திருக்கிறார்கள்.
இவர்களின் சிரமங்கள், இழப்புக்களுக்கு இதுவரை சரியான நியாயமான தீர்வுகள் வழங்கப்படவில்லை, கிடைக்கவில்லை. இது மிகப் பெரிய அநியாயம்.
பின்னர், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதும் 2010ஆம் ஆண்டில் இருந்து மீள்குடியேற ஆரம்பித்தார்கள். ஆனால், இம்மக்கள் மீள்குடியேற ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர்களின் காணிகளை அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தனதாக்கிக் கொண்டது. இது இவர்கள் மீது விழுந்த இன்னுமொரு இடி.
இந்நிலையில், வடமாகாண முஸ்லிம்களுக்காக இருந்த ஒரே ஒரு அமைச்சர் என்றால் அது றிஸாத் பதியுதீன்தான். அவர் தன்னாலான சில வேலைகளை செய்தார். (அதில் குறை, நிறைகள் நிறையவே இருக்கின்றன – நான் இங்கு அது குறித்துப்பேச வரவில்லை.)
காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குதல் அதனோடு வீடும் வழங்குதல் என்பது அவரது பிரதான திட்டங்களில் ஒன்றாகும். (இதிலும் குறை, நிறைகள் நிறையவே இருக்கின்றன – நான் இங்கு அது குறித்துப்பேச வரவில்லை)
அவர் இவ்வாறான திட்டங்களை மேற்கொள்கின்றபோது, இந்த ஊடகங்கள் அவரை எப்படி எப்படியெல்லாம் வசைபாடி, வில்பத்துவை அழிக்கிறார் என்று கூறி சிங்கள – முஸ்லிம் உறவில் பாரிய விரிசல்களை ஏற்படுத்தினர். ஊடக தர்மங்களையே மிஞ்சி பல பிரச்சினைகளை ஏற்படுத்தினர்.
வில்பத்துவைப் பாதுகாப்போம் என ஒரு குழுவும் வெளிக்கிழம்பி நாளாந்தம் கொழும்பிலும், நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களையும் ஏற்பாடு செய்து இலங்கை முஸ்லிம் சமூகத்தவர்களையே மோசமாக சித்தரித்து சிங்கள சமூகத்திற்கு மத்தியில் பாரிய சிக்கல்களை உருவாக்கினர்.
இதனால், வடமாகாண முஸ்லிம்கள் பாரிய பிரச்சினைகளை சந்தித்தனர். ஏற்கனவே பலவந்த வெளியேற்றத்தால் நொந்து நொருங்கி இருக்கின்ற மக்களுக்கு யுத்தத்தின் பின்னர் ஒரு சந்தோசம் ஏற்படுகின்றபோது, மீண்டும் ஒரு பாரிய இடி விழுந்து எழும்பவே முடியாத நிலைக்கு கொண்டு சென்றதுதான் இந்த ஊடகங்களின் தாக்குதல்கள்.
இதன் மூலம் தற்போது முஸ்லிம்களின் பிரதேசத்திற்கு ஒரு முஸ்லிம் செயலாளரை நியமிக்கக் கூட அங்கு வாழ்கின்ற சிலர் விடுவதில்லை. அவ்வாறு நியமிக்க முனையும் போது இந்த வில்பத்து விவகாரத்தை காட்டி முஸ்லிம்களை அடக்குகின்றனர்.
ஆனால், இன்று… தீர்ப்பும் ஊடகமும்
அன்று றிஸாத் பதியுதீன் என்ற அமைச்சரின் செயலை நாளாந்தம் படு மோசமாக சித்தரித்து சிங்கள – முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் விரிசல்களை ஏற்படுத்திய ஊடகங்கள், தற்போதைய தீர்ப்பை ஒரு சாதாரண செய்தியாகக் கூட பிரசுரிக்கவில்லை என்பது கவலைக்கிடமாக உள்ளது. இரண்டு தமிழ் பத்திரிகைகளும் ஒரு சில இணையதள செய்தி தளங்களைத் தவிர வேறு எந்த ஊடகங்களும் அச்செய்தியை கண்டுகொள்ளவில்லை.
விரிசல்களை ஏற்படுத்துவதற்கு இருந்த ஆர்வம், அதற்கு நியாயமான தீர்ப்புக் கிடைத்ததும், அதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு ஏன் முனையவில்லை.
அப்படியென்றால் அன்று றிஸாத் பதியுதீன் என்ற அமைச்சரையும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சிங்கள சமூகத்திற்குள் மோசமாக காட்டி, பாரிய சிக்கலை ஏற்படுத்தி விரிசல்களை ஏற்படுத்தியதன் நோக்கம்தான் என்ன? இதுதானா உங்களது ஊடக தர்மம்.?
ஊடகங்களே…!
அன்று நீங்கள் செய்தது சரியென்றால் இன்று அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பையும் பிரசுரிக்க வேண்டும். அதேபோல், அன்றைய செய்தியையும் இன்றைய நிகழ்வையும் ஒப்பிட்டு சிங்கள சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
அதனை விடுத்து இப்போது ஏன் மௌனம் காக்கிரீர்கள்? இப்போதைய உங்கள் மௌனம் தர்மம் என்றால்? அன்றைய உங்கள் கூக்குரல் என்ன? எனவே, நடுநிலமையாக நீதியாக தங்களது கருத்துக்களை முன்வையுங்கள்.
P.M முஜீபுர் ரஹ்மான் (LLB)