என்.எம்.எம்.மிப்லி
ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
mifly@mifatax.lk
ஸகாத் என்பது வெறுமனே ஒரு தர்மம் வழங்கும் செயற்பாடல்ல. மாற்றமாக, சமூக நீதியை ஸ்தாபித்து வறுமையை ஒழிப்பதற்கான ஒரு முறைமையாகும்.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில், ஸகாத்தின் எனும் அந்த வீரியம் மிக்க முறைமையின் பயன்பாடு சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதே பொதுவான அவதானம்.
மூலோபாய ரீதியான சரியான திட்டமிடல்கள் இல்லாமையும் அதிகரித்த நுகர்வு மைய அணுகுமுறைகளுமே இதன் பின்னால் தொழிற்படும் பிரதான காரணிகள் என அடையாளப்படுத்தலாம்.
ஸகாத் விநியோகமென்பது வெறுமனே நிவாரணம் வழங்குதல் எனும் மனோநிலையிலிருந்து, பொருளாதார வலுவூட்டல் எனும் கட்டத்தை வந்தடையாத வரையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் வறுமை கோரத் தாண்டவமாடுவதை நிறுத்த முடியாது.
இலங்கையைப் பொறுத்தவரையில் தேசிய ரீதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் சராசரியை விடவும் முஸ்லிம்களின் வறுமை வீதம் மும்மடங்கு அதிகமாக இருப்பதாகவே கருதப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் ஏன் இதனைப் பேச வேண்டும்?
பொதுவாகவே இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் ரமழானில்தான் ஸகாத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்ற ஒரு புரிதல் இயல்பாக நிலவுகிறது.
ரமழானில் அனைவரும் ஸகாத்தைப் பற்றிப் பேசுவதிலும் ஸகாத் கடமையை நிறைவேற்றுவதிலும் மும்முரமாக ஈடுபட்டுவிட்டு அதன் பின்னர் அடுத்த ஒரு வருட காலத்துக்கு அது பற்றிய எதுவித பிரக்ஞைகளும் அற்றவர்களாக மாறி விடுகின்றனர்.
ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஸகாத் என்பது ஒரு பருவகாலக் கிரியையல்ல.
மாற்றமாக அது சமூக நீதியை உத்தரவாதப்படுத்தி வறுமையை இல்லாதொழிக்கும் ஒரு நிரந்தரக் கருவியாகும்.
அதன் நோக்கங்கள் சரிவரப் புரியப்பட்டு, அவற்றை அடையும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் அதன் விளைவாக ஒரு பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டு குடும்பங்களும், சமூகமும் வலுவூட்டப்படுவதனூடாக அனைவரினதும் வாழ்க்கை கௌரவமானதாக மாறுமென்பது திண்ணம்.
எனவே இந்த சந்தர்ப்பத்தில் இந்த அழைப்பை விடுப்பதனூடாக ஸகாத்தை வழங்குபவர்களுக்கும், அது சார்ந்த செயற்பாடுகளை நிர்வகிப்பவர்களுக்கும், அதில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்படும் அனைவருக்கும் ஒரு தொடர் உரையாடலுக்குள் நுழைவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்.
அதன் மூலமாக ஸகாத் என்பது வெறுமனே ஒரு பருவகாலக் கிரியை என்று புரையோடிப் போயிருக்கும் சிந்தனை மாறி சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான ஒரு நிலையான திட்டம் என்ற மனோநிலையை நோக்கி இது நகர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
இலங்கை முஸ்லிம்களும் வறுமையும்
வறுமையை அளவிடுவதற்கான சர்வதேசக் குறிகாட்டிகளின் பிரகாரம் ஒரு நாளைக்கு இலங்கை ரூபாவில் ரூ. 645 (2.15 அமெரிக்க டாலர்கள்) தனிநபர் வருமானமாகப் பெறாத ஒருவர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்.
அதன் பிரகாரம் பார்க்கும் போது ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கான குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவினமாக ரூ. 96,750 அவசியப்படுகிறது.
அதாவது வறுமைக் கோட்டின் கீழ்ப் பகுதிக்கு அந்தக் குடும்பம் வராமல் அதன் மேல் பகுதியில் ஒட்டி உரசிக் கொண்டு நிற்பதற்குத்தான் இந்தத் தொகை மாதாந்த வருமானமாக இருக்க வேண்டும். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கல்ல.
சர்வதேசத் தரவுகளின் பிரகாரம் இலங்கை முஸ்லிம்களின் பொருளாதார நிலையை அவதானிக்கும் போது ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இலங்கையில் அண்ணளவாக இலங்கையிலுள்ள ஐந்து இலட்சம் முஸ்லிம் குடும்பங்களில் எத்தனை குடும்பங்கள் மாதாந்த வருமானமாக ரூ. 96,750 ஐப் பெறுகின்றன? என்பதே அந்தக் கேள்வி.
என்னுடைய பொதுவான அவதானத்தின் பிரகாரம் பார்த்தால் இந்தத் தரவுகளை வைத்துப் பார்க்கின்ற போது கிட்டத்தட்ட 75 வீதத்துக்கும் அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ்தான் வாழ்கின்றனவா என்ற அச்சம் ஏற்படுகிறது.
தேசிய ரீதியான தரவுகளை வைத்துப் பார்க்கின்ற போது, இது இன்னும் பாரதூரமான நிலையை அடைவதாகவே தோன்றுகிறது. 2024ம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம், இலங்கையின் வருடாந்த தலா வருமானம் ரூ. 1,296,000 (4,320 அமெரிக்க டாலர்கள்) ஆகும். இந்தத் தரவின் பிரகாரம் ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மாதாந்த வருமானம் ரூ. 540,000 ஆக இருக்க வேண்டும்.
இலங்கையிலுள்ள முஸ்லிம் குடும்பங்களில் எத்தனை குடும்பங்கள் இந்தத் தொகையை மாத வருமானமாகப் பெறுகின்றன என்பதை இதனை வாசிக்கும் நீங்களே அனுமானித்துக் கொள்ளுங்கள்.
எனது அனுமானத்தின் படி 10 வீதமான முஸ்லிம் குடும்பங்களாவது இந்தத் தொகையை மாத வருமானமாகப் பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
இந்தக் கட்டுரையானது பொதுவாகவே ஸகாத்தைப் பற்றிப் பேசும் போது எல்லோரும் பேசும் ‘ஸகாத் என்றால் என்ன? என்னென்ன பொருட்கள் மீது ஸகாத் விதியாகும்? என்பன போன்ற விடயங்களைப் பற்றிப் பேசப் போவதில்லை.
நாம் பல நூற்றாண்டுகளாக அவற்றைப் பற்றித் தாராளமாகப் பேசி முடித்திருக்கிறோம்.
இங்கே நாம் பேசுபொருளாகக் கொள்வது ஏன் ஸகாத்தின் இயலுமையையும் வீரியத்தையும் நம்மால் முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் இருக்கின்றது என்பதைத்தான்.
இங்குள்ள மிகப்பெரும் முரண்நகை என்னவென்றால் பொதுவாகவே ஒரு பொருளாதாரச் சமூகமாக எல்லோராலும் கருதப்படும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில், ஸகாத் சேகரிப்பு மூலமாகக் கிடைக்கும் பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு நீடித்த நிலையான மாற்றங்கள் எதனையும் செய்ய முடியாமல் இருப்பதுதான்.
ஸகாத் எனும் கோட்பாடு என்ன சொல்கிறது?
ஒரு முஸ்லிம் தனது வருடாந்த செல்வச் சேகரிப்பு அல்லது பருவகால விவசாய உற்பத்தி என்பனவற்றில் குறித்த அளவை (நிஸாப்) தாண்டும் போது கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய பொருளாதாரக் கடமையே ஸகாத்.
இந்த அளவானது மொத்தமான செல்வத்துக்கு 84 கிராம் சுத்தமான தங்கம் மற்றும் விவாசாய உற்பத்திக்கு 647 கிலோகிராம் அரிசி ஆகியவற்றை அளவீடாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
அந்த அடிப்படையில் பார்க்கும் போது ஸகாத் என்பது ஒரு வருமான வரி என்றல்லாமல் ஒருவரது சொத்து மதிப்பு மற்றும் ஐந்தொகை என்பவற்றைக் கொண்டு மதிப்பிடப்படும் ஒரு வரியாக அடையாளப்படுத்தப்படலாம்.
வறுமை என்றால் என்ன?
ஒருவன் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளில் போதாமை இருப்பதை வறுமை என ஒரு சாதாரண வரைவிலக்கணத்தைச் சொல்ல முடியுமாக இருந்தாலும் கூட, பொதுவாகவே வறுமை என்பது இரு வகையாகப் பிரித்து நோக்கப்பட முடியுமான ஒன்றாகும்.
நிரந்தர வறுமை:
ஒரு மனிதன் வாழ்வதற்குத் தேவையான உணவு, தண்ணீர், சுகாதார வசதிகள், தங்குமிட வசதிகள், கல்வி உள்ளிட்ட அடிப்படைகளைக் கூட ஒழுங்கான முறையில் பெற்றுக் கொள்ள முடியாத பொருளாதாரக் கஷ்ட நிலையையே இது குறிக்கிறது.
ஒப்பீட்டளவிலான வறுமை:
ஒரு சமூகத்தில் நடைமுறையில் இருக்கும் சராசரியான அடிப்படை வாழ்க்கைத் தரத்தோடும் வருமானப் பங்கீட்டோடும் ஒப்பிடும் போது ஒருவனது வாழ்க்கைத் தரமும் வருமானமும் அதனை விடவும் குறைவாக இருப்பதையே ஒப்பீட்டளவிலான வறுமை என்ற பதம் குறிக்கிறது.
சிலபோது அவனுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கான வருமானம் இருந்தாலும் கூட அவன் அந்த சராசரி வருமானத்தை விடவும் குறைந்த வருமானத்தில் இருந்தால் வறுமையில் இருப்பவனாகவே கருதப்படுவான்.
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைப் பொறுத்தவரையில், நிரந்தர வறுமை என்பது பெரும் பிரச்சினைக்குரிய அம்சமாகும்.
அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்தவரையில் அங்கு அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விடயமாக ஒப்பீட்டளவிலான வறுமை காணப்படுகிறது.
அங்கு சிலபோது ஒரு வாகனத்தை சொந்தமாக வைத்திருக்க முடியாத நிலையில் உள்ள ஒருவரும் கூட வறுமையில் இருப்பவராகக் கருதப்படுவார்.
ஸகாத் எனும் இஸ்லாமிய முறைமை
ஸகாத்தின் முக்கியத்துவத்தை அல்குர்ஆன் முப்பதுக்கும் அதிகமான இடங்களில் வலியுறுத்துகிறது.
‘அவர்களது செல்வத்திலிருந்து, அவர்களைத் தூய்மைப்படுத்தி அதன் மூலமாக அவர்களைப் பரிசுத்தப்படுத்தக்கூடிய ஸதகாவை எடுங்கள்’ (9:103)
என அல்குர்ஆன் கூறுகின்றது. அவ்வாறே நபியவர்களைப் பொறுத்தவரையில் ஸகாத்தின் ஆன்மீக மற்றும் சமூகவியல் பரிமாணங்களைப் பல்வேறு வகைகளில் வலியுயுறுத்தியிருக்கிறார்கள்.
பதுக்கி வைக்கப்படும் செல்வத்தால் மறுமையில் ஏற்பட முடியுமான கைசேதம் பற்றியும், சரியான முறையில் செலவழிக்கப்படும் செல்வத்தால் எப்படி பேரழிவுகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்பது பற்றியும் அத்தகைய வலியுறுத்தல்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
இவற்றின் ஒளியில் பார்க்கும் போது ஸகாத் என்பது வெறுமனே வறுமையிலிருக்கும் ஒருவருக்கு தற்காலிக நிவாரணங்களை வழங்கும் ஒன்றல்ல என்பதையும், வறுமையை முற்றாக இல்லாதொழித்து பொருளாதார சமநிலையொன்றையும் சமுதாய நட்புறவையும் கட்டியெழுப்பும் ஒரு முறைமை என்பதையும் எம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இலங்கையிலிருக்கும் முரண்நிலை
இலங்கையில் ஸகாத்தாக வருடாந்தம் சேகரிக்கப்படும் தொகையை குத்துமதிப்பாகக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட ஆயிரம் மில்லியன் (ஒரு பில்லியன்) ரூபாய்களை விடவும் அதிகமான தொகை இருப்பதாக அறியக் கிடைக்கிறது. அதே நேரம் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் வறுமையானது ஒப்பீட்டளவில் மிக அதிகமாக உள்ளது.
ஏன் இப்படியான ஒரு முரண்நிலை தோற்றம் பெற்றிருக்கிறது? ஏன் ஸகாத் மூலமாக அதனால் எதிர்பார்க்கப்படும் விளைவு அடையப்படவில்லை? என்பன போன்ற கேள்விகள் தவிர்க்க முடியாமல் உருவாகின்றன.
ஸகாத் மூலமாக எதிர்பார்க்கப்படும் காத்திரமான அடைவுகள் சாத்தியப்படாமல் இருப்பதற்கான பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
ஆனால் எனது அவதானத்தில் அவற்றில் மிக முக்கியமானவையாக இரண்டு அம்சங்களைக் காண்கிறேன். அந்த இரண்டும் ஸகாத் விநியோகத்தோடு தொடர்புபட்டனவாக இருக்கின்றன.
நுகர்வு மைய விநியோகம்: ஸகாத்தாக சேகரிக்கப்படும் பணத்தில் ஒரு பெருந்தொகையான பணம் பலரது உடனடித் தேவைகளான வீடு, மருத்துவம், உணவு என்பன போன்றவற்றுக்கு செலவிடப்படுகின்றது.
இவையனைத்தும் அடிப்படைத் தேவைகளாக இருந்தாலும் கூட இவற்றுக்காக செலவழிக்கப்படும் பணம் மூலமாக வறுமையிலிருந்து முழுமையாக, நிரந்தரமாக பெரும்பாலும் எவரும் வெளியேற்றப்படுவதில்லை.
மட்டுப்படுத்தப்பட்ட முதலீட்டு முயற்சிகள்: ஸகாத் பணத்தில் மிகக் குறைந்தளவான ஒரு தொகையே வருமானமீட்டலையும், நீண்ட கால செயற்றிட்டங்களையும் கருத்தில் கொண்ட வகையில் செலவிடப்படுகின்றது.
அதிலும் கூட அவ்வாறான பல்வேறு செயற்றிட்டங்கள் ஒழுங்கான திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம், மேற்பார்வை என்பன இல்லாத காரணத்தினாலும், போதுமான முதல் இல்லாத காரணத்தினாலும் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவடைகின்றன. இதன் மூலமாக எதிர்காலத்தில் அவ்வாறான செயற்றிட்டங்களுக்குச் செல்வதில் உள்ள ஆர்வமும் குறைந்து செல்கிறது.
இவ்வாறான வினைத்திறனற்ற ஸகாத் விநியோகம் காரணமாக பலரது தனிப்பட்ட உடனடித் தேவைகள் தற்காலிகமாக நிவர்த்தி செய்யப்பட்டாலும் கூட, நீண்ட கால நோக்கிலான பொருளாதார வலுவூட்டல்களோ அல்லது வறுமைக் கோட்டின் கீழிருந்து நிரந்தரமாக மேலே வருவதோ ஒரு போதும் நடைபெறுவதில்லை.
மாற்றமாக வருடாந்த ஸகாத்தை எதிர்பார்த்து அதில் தங்கி வாழும் கலாச்சாரமொன்று உருவாகி வளர்ந்து வந்திருப்பதை அவதானிக்க முடியும்.
ஸகாத் விநியோகம் தொடர்பிலான ஒரு மீள்பரிசீலனையின் அவசியம்
ஸகாத் மூலமாக எதிர்பார்க்கப்படும் விளைவு எட்டப்பட வேண்டுமானால் அதன் விநியோக அணுகுமுறையில் ஒரு தளமாற்றம் அத்தியாவசியமாகின்றது. அத்தகையதொரு தளமாற்றத்துக்கான அடிப்படைக்கும் அல்குர்ஆன்தான் வழிகாட்டுகிறது.
‘நியச்சயமாக ஒரு சமூகத்தினர் தமது நிலைமைகளைத் தாமே மாற்றிக் கொள்ளாதவரையில் அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை’ (13:11) என்ற வசனம் அந்த செய்தியைத்தான் எமக்குச் சொல்கிறது.
ஸகாத் நிறுவனங்கள் வயதில் மூத்த ஒரு நல்ல மனிதரால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று எமக்கு மத்தியில் உள்ள புரிதலானது ஸகாத்தை வினைத்திறன் மிக்க நிறுவனமாக மாற்றுவதற்குத் துணை புரியக் கூடிய ஒன்றல்ல.
சரியான திட்டமிடல், உரிய அறிவுப் பின்னணியும் தகுதியும், மூலோபாய ரீதியான அணுகுமுறைகள் என்பவற்றின் மூலமாகத்தான் எந்தவொன்றையும் வெற்றிகரமான செயற்றிட்டமாக மாற்றலாம்.
அந்த வகையில் கீழ்வரும் உள்ளீடுகள் ஸகாத் விநியோக நடைமுறையில் உள்வாங்கப்படுவது அவசியமாகும்.
நிவாரணம் மற்றும் வலுவூட்டல் என்பவற்றுக்கிடையில் ஒரு சரியான சமநிலைத்தன்மை அவசியம்: ஏழ்மையில் இருப்பவர்களின் உடனடித் தேவைகளுக்கான நிவாரணம் வழங்கப்படுவது கட்டாயமாகும்.
ஆனால் அதற்கு எவ்வகையிலும் குறையாத முக்கியத்துவம் அவர்களை நிரந்தரமாக வறுமையிலிருந்து வெளியேற்றுவதற்குத் தேவையான திறன் விருத்தி, தொழில்வாய்ப்பு, நிரந்தர வருமானம் என்பவற்றுக்கும் வழங்கப்பட வேண்டும்.
தொழின்முறை சார் முகாமைத்துவம்: ஸகாத் நிறுவனங்களை நிர்வகிப்பதற்கும் முகாமை செய்வதற்கும் பொருளாதாரத் துறை சார்ந்த நிபுணர்களும் தொழின்முறை ரீதியான உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட வேண்டும். அவர்களால்தான் இப்பிரச்சினையை அதற்குரிய மொழியில் அணுகி உரிய தீர்வுகளை முன்னிறுத்தி நகர முடியுமாக இருக்கும்.
சமுதாய ஈடுபாடு: ஸகாத் வழங்குநர்களால் மட்டும் வறுமையை ஒழிக்க முடியாது என்ற யதார்த்தமும், ஒட்டுமொத்த சமூகத்தினதும் ஈடுபாடும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் இல்லாமல் அது சாத்தியமில்லை என்ற உண்மையும் பரவலாகப் பேசப்பட்டு, வறுமை ஒழிப்பு ஒரு சமூகக் கடமை என்ற விடயம் வலியுறுத்தப்பட வேண்டும்.
ஸகாத் முதலீடுகள் ஏன் பெரும்பாலும் நஷ்டமடைகின்றன?
ஸகாத்தை ஒரு நிரந்தர வருமானமீட்டும் முதலீடாக மாற்றும் செயற்றிட்டங்கள் பெரும்பாலும் நஷ்டத்திலும் கைசேதத்திலுமே முடிகின்றன.
எண்ணங்கள் நல்லவையாக இருந்தாலும் கூட, பொதுவாகவே நீடித்த நிரந்தரமான விளைவுகளைத் தரும் அத்தகைய முதலீடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவென்றே சொல்ல வேண்டும்.
இதற்கான காரணங்களை ஆராய்ந்தால் மூன்று முக்கிய காரணிகளை அடையாளம் காண முடியுமாக உள்ளது. எந்தவொரு வியாபாரமும் வெற்றி பெற வேண்டுமென்றால் அந்த மூன்று அம்சங்களிலும் சரியாக இருப்பது அவசியம்.
சரியான திட்டமிடலும் தீர்மானம் மேற்கொள்ளலும்
நவீன வியாபார உலகமென்பது முற்றிலும் விஞ்ஞானபூர்வமான அதே நேரம் மிகவும் சிக்கலான பொறிமுறைகளைக் கொண்ட, மிகுந்த போட்டித்தன்மை வாய்ந்த ஒன்றாகும்.
மிகவும் நுணுக்கமான திட்டமிடல்களோடு களமிறங்காத எந்த ஒரு செயற்றிட்டமும் இன்றைய வியாபார உலகில் கொஞ்ச காலத்துக்கேனும் தாக்குப்பிடிக்க மாட்டா.
குறித்த செயற்றிட்டத்தை செயற்படுத்துவதற்கான சாத்தியப்பாடு, அந்த செயற்றிட்டத்தின் தராதரம் பற்றிய விமர்சனபூர்வமான பின்னூட்டங்கள், சரியான வியாபார மாதிரிகள், பொருத்தமான இடர் முகாமைத்துவ மூலோபாயங்கள் என்பன போன்ற எதுவுமே இல்லாத செயற்றிட்டங்களோ முதலீடுகளோ ஒரு போதும் நின்றுபிடிப்பதில்லை.
ஸகாத் செயற்றிட்ட நிர்வாகிகளும் தன்னார்வத் தொண்டர்களும் தன்னலமற்று தம்மை இதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாலும் கூட, அவர்களுக்குப் பெரும்பாலும் அவற்றுக்குத் தேவையான துறைசார் அறிவும், நிபுணத்துவமும் இல்லாமல் அல்லது போதாமலேயே இருக்கின்றன.
பெரும்பாலானவர்களுக்கு தொழின்முறை ரீதியான மதிப்பீடுகள் பற்றிய எதுவிதமான புரிதல்களும் இல்லை. இன்னும் பலரது பார்வையில் தேவையான ஆய்வுகளுக்கு நிதியொதுக்கீடு செய்வதென்பது வீண்விரயமாக இருக்கிறது.
இப்படி அறிவுக்கும் அல்குர்ஆனுக்கும் முரணாக இதனைக் கையாண்டு ஒருபோதும் உரிய விளைவுகளை எதிர்பார்க்க முடியாது.
‘நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் துறைசார் அறிவு உள்ளவர்களிடம் அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்’ (16:43) என அல்குர்ஆன் கூறுகிறது.
எனவே ஸகாத் செயற்றிட்டங்களில் பொருளியல் நிபுணர்களையும் பொருளாதாரத் துறைசார் தொழின்முறை வல்லுனர்களையும் இணைத்துக் கொள்வதென்பது வெறும் ஒரு தெரிவாகவன்றி கட்டாய நடைமுறையாக மாற வேண்டியதன் அவசியத்தை நாம் புரிpந்துகொள்ள வேண்டும்.
அத்தகையவர்களது சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான செலவினத்தை வெறும் செலவாகப் பார்க்காமல் இந்தத் திட்டத்தை வெற்றிகரமான திட்டமாக மாற்றுவதற்கான ஒரு நிரந்தர முதலீடாகப் பார்க்கும் பக்குவம் உருவாக வேண்டும்.
ஸகாத் பங்கீட்டில் ‘ஆமிலீன்’ என அழைக்கப்படும் ஸகாத் செயற்றிட்டத்தை நிர்வகிப்பவர்களுக்கும் ஒரு பங்கிருக்கிறதென்பதன் அர்த்தம், இவ்வாறான துறைசார் நிபுணர்களின் சேவையைப் பெறுவதற்கான செலவினத்துக்கான தெளிவான நியாயமாகக் கொள்ளப்பட முடியுமென்பதில் சந்தேகமில்லை.
போதுமான நிதியொதுக்கீடு
ஸகாத் செயற்றிட்டங்கள் தோல்வியில் முடிவடைவதில் பங்களிப்புச் செய்யும் இன்னுமொரு முக்கியமான காரணமாக இருப்பதுதான் பயனாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக வேண்டி சிறு சிறு முதலீடுகளில் அதிகமான செயற்றிட்டங்களை ஆரம்பிப்பதாகும்.
இதன் மூலமாக பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதான ஒரு மாயை ஏற்பட்டாலும் கூட, எந்தவொரு செயற்றிட்டமும் அல்லது வியாபாரமும் அதற்குத் தேவையான போதுமான முதலீடில்லாமல் தாக்குப்பிடிக்க முடியாதென்ற காரணத்தினால் சீக்கிரமே தோல்வியில் முடிவடைந்து விடுகின்றன.
பலர் கொஞ்சத்தையேனும் பெற வேண்டுமென்பதற்காக ஈற்றில் நிரந்தரமான எந்த அடைவுமில்லாத ஒரு நிலை ஏற்பட்டு விடுகின்றது. ஏனெனில் யாருக்கும் போதுமான முதல் கிடைப்பதில்லை.
எனவே ஸகாத் நிறுவனங்கள் மூலமாக ஆரம்பிக்கப்பட வேண்டிய செயற்றிட்டங்களும் சரி, அந்த செயற்றிட்டங்களுக்கு எவ்வளவு நிதியொதுக்கீடு இடம்பெற வேண்டுமென்பதும் சரி கட்டாயம் அதற்குரிய நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் தீர்மானிக்கப்பட்டு போதுமானளவு நிதியொதுக்கீடு இடம்பெறுவது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
இந்த செயற்றிட்டங்களின் போது பயனாளர்களின் எண்ணிக்கையை விடவும் செயற்றிட்டங்களின் தரமும் விளைதிறனும் முன்னுரிமை பெற வேண்டும்.
சிலபோது போதுமான முதலீடு இல்லாதபட்சத்தில் கூட கூட்டு ஸகாத் மூலமாக கூட்டு வியாபார முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது அது காத்திரமான விளைவுகளைத் தரக்கூடியதாக மாறும். உதாரணமாக:
ஃபகீர் மற்றும் மிஸ்கீன் தரத்தில் உள்ளவர்களைப் பங்குதாரரர்களாகக் கொண்ட ஒரு தனியார் கம்பனியை உருவாக்கலாம்.
என்ன வகையான வியாபார முறைமையில் முதலிடுவது, உதாரணமாக விவசாயமா, கைத்தொழிலா, அல்லது சேவை வழங்குதலா என்ற தீர்மானத்தை எப்போதும் துறைசார் வழிகாட்டலோடு மாத்திரமே மேற்கொள்ளல்.
அதன் போதுதான் கிடைக்கக் கூடிய வளங்கள், சந்தையில் உள்ள கேள்வி மற்றும் நிரம்பல், பிரதேசத்துக்குப் பிரதேசம் உள்ள தேவைகளின் வித்தியாசங்கள் என்பன போன்ற அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
ஒரு ஸகாத் நிறுவனத்தால் போதுமான முதலீட்டைச் செய்ய முடியாமல் இருக்கும் பட்சத்தில், ஏனைய ஸகாத் நிறுவனங்களோடு கூட்டிணைந்து அந்த இடைவெளிகளை நிரப்பும் வேலையைச் செய்யலாம்.
இவ்வாறான முயற்சிகளில் ஒவ்வொரு நிதியாண்டின் நிறைவிலும் இலாபம் பங்குதாரர்களுக்கு மத்தியில் ஆதாயப் பங்காகப் பகிர்ந்தளிக்கப்படலாம். இதன் மூலமாக அவர்கள் வெறுமனே சும்மா உட்கார்ந்து கொண்டு நிவாரணம் பெறுபவர்களாக இல்லாமல் செல்வத்தை உருவாக்குவதில் நேரடியாகப் பங்களிப்புச் செய்து வருமானமீட்டுபவர்களாக மாறுவார்கள்.
வினைத்திறன் மிக்க முகாமைத்துவம்
சரியான திட்டமிடல்களும், போதுமான நிதியொதுக்கீடும் இருந்தாலும் கூட, வினைத்திறன் மிக்க நிர்வாகமும் முகாமைத்துவமும் இல்லாதபட்சத்தில் எந்த வியாபாரமும் படுத்து விடும்.
ஸகாத் நிதி மூலமாக உருவாக்கப்பட்ட எத்தனையோ வியாபார முயற்சிகள் தேவையான திறன்களும், மனித வளங்களும், சந்தைப்படுத்தலும், நிதி முகாமைத்துவமும் இல்லாத காரணத்தினால் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன.
பணத்தை சரியாகக் கையாளும் பக்குவம் இல்லாதவர்களின் கையில் பணத்தைக் கொடுப்பதை அல்குர்ஆன் தடை செய்திருக்கின்றது.
‘உங்களுக்கு வாழ்வாதாரமாக அல்லாஹ் ஏற்படுத்தித் தந்திருக்கும் உங்களது செல்வத்தை (அதனை சரியாக நிர்வகிக்கும்) பக்குவமற்றவர்களிடம் கொடுக்க வேண்டாம்’ (4:5) என அல்குர்ஆன் கூறுகிறது.
செல்வம் என்பது ஓர் அமானிதம் என்ற இஸ்லாத்தின் அடிப்படையே இதனூடாக வலியுறுத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக செல்வத்தின் சொந்தக்காரன் அல்லாஹ்வே. மனிதர்கள் தற்காலிகமாக அவற்றை நிர்வகிப்பவர்கள் மாத்திரமே.
அந்த வகையில் அல்லாஹ் சொன்னதன் பிரகாரம் பொது நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஸகாத் நிதி செலவிடப்படுவதையும் அது வினைத்திறன் மிக்கதாக நிகழ்வதையும் உறுதிப்படுத்தும் வகையில் வினைத்திறன் மிக்க முகாமைத்துவம் அமைய வேண்டியது அவசியமாகிறது.
இன்றைய காலத்தில் இதற்கான மிகவும் பொருத்தமான முறைமையாக அமைய முடியுமானது ஸகாத் நிறுவனத்தின் பிரதிநிதிகளையும், துறைசார் நிபுணர்களையும் உள்ளடக்கிய ஒரு பணிப்பாளர் சபைதான்.
இந்தப் பணிப்பாளர்களுக்கு அன்றைய சந்தை நிலைமைக்கும் பெறுமதிக்கும் ஏற்ப உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படுமிடத்து அவர்களது பங்களிப்பு தரமானதாக மாறும் அதே நேரம் அவர்கள் வகைகூறும் நிர்ப்பந்தத்துக்கும் உள்ளாக்கப்படுவார்கள்.
இதனோடு சேர்த்து, ஏற்கனவே கம்பனிகளில் பங்குதாரர்களாக உள்வாங்கப்பட்ட ஸகாத் பயனாளிகளிலிருந்து ஊதியத்துக்குப் பணிபுரியும் வகையில் தொழில் வழங்கல்களையும் தேவைப்படின் உருவாக்கலாம்.
அந்த வகையில் அவர்கள் வருடாந்த இலாபப் பங்கை மட்டுமன்றி மாதாந்த சம்பளத்தையும் பெறும் நிலை உருவாகும். இதன் மூலமாக அவர்கள் வறுமையின் கோரப்பிடியிலிருந்து வெளியேறுவதற்கான பயணம் துரிதப்படுத்தப்படும்.
இது சரியான முறையில் நடைபெறுமானால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஸகாத் நிதியத்தின் பயனாளர்கள் என்ற இடத்திலிருந்து ஸகாத் வழங்குநர்களாக தரமுயரும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைக்கும். ஸகாத்தின் அடிப்படை நோக்கமும் அதனால் நிறைவேறும்.
எதிர்காலத்துக்கான இலக்கு
‘தனது செல்வத்தின் ஸகாத்தை யாருக்கு வழங்கலாம் என்று ஒருவன் தேடியலையுமளவுக்கு செல்வம் பெருகும் நாள் வந்து அதில் அவன் ஒருவனுக்கு அதனைக் கொடுக்கும் போது ‘இல்லை எனக்குத் தேவையில்லை’ என அவன் சொல்லும் நாள் வரும் வரையில் மறுமை வர மாட்டாது. ‘ (புகாரி 493) என நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
இந்த இலக்கு அடையப்பட முடியாததல்ல. சரியான திட்டமிடல்கள், போதுமான நிதியொதுக்கீடு, துறைசார் முகாமைத்துவம் என்பவற்றின் மூலமாக ஸகாத்தை ஒரு தற்காலிக நிவாரணம் என்ற தற்போதைய நடைமுறையிலிருந்து, நிரந்தர பொருளாதார வலுவூட்டல் மூலமான வறுமை ஒழிப்பு மற்றும் தன்னிறைவு என்பவற்றுக்கான ஒரு பொறிமுறை என்ற இடத்துக்கு நிச்சயம் நகர்த்தலாம்.