இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence Zone) (வட அரைக்கோளம் மற்றும் தென் அரைக்கோளம் ஆகியவற்றிலிருந்து வரும் காற்று இணையும் வலயம்) மற்றும் நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை ஆகியன தற்போது நாட்டின் வானிலையை பாதித்துள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, இன்று (15) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும்.
மேல், தென், வட மாகாணங்களில் காலையிலும் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பகுதிகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.