ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த நிபந்தனைகளை ஏற்பதாக ஹமாஸ் அறிவித்திருக்கிறது.
காசா போர் முடிவுக்கு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த திட்டத்தின் சில அம்சங்களை ஏற்க ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலிய கைதிகளை விடுவிப்பது மற்றும் காசா நிர்வாகத்தை ஒப்படைப்பது போன்ற சில முக்கிய நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது. இருப்பினும், இத்திட்டத்தின் பல அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “டிரம்ப் தனது 20 அம்ச திட்டத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ ஞாயிற்றுக்கிழமை வரை ஹமாஸுக்கு கால அவகாசம் அளித்திருந்தார். இதற்கு ஹமாஸ் தனது பதிலை வழங்கியுள்ளது. ஆனால், ஹமாஸ் கோருவது போல, மற்ற நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுமா? என்பது குறித்து டிரம்ப் இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.
குறிப்பிடத்தக்க வகையில், ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நிபந்தனை குறித்து எந்த கருத்தையும் ஹமாஸ் தெரிவிக்கவில்லை. இந்த நிபந்தனையை ஹமாஸ் முன்னதாகவே நிராகரித்திருந்தது. காசா மீதான போர் நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், உடனடி உதவிப் பொருட்கள் விநியோகம் போன்றவற்றை டிரம்ப் முன்மொழிந்திருந்தார்.
காசா மீதான போரை முடிவுக்கு கொண்டுவரவும், கைதிகள் பரிமாற்றம் செய்யவும், உடனடி உதவி வழங்கவும் அரபு, இஸ்லாமிய மற்றும் சர்வதேச நாடுகள் மற்றும் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் முயற்சிகளை ஹமாஸ் பாராட்டுகிறது என்று ஹமாஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது” என ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.
மேலும், “டிரம்ப் முன்மொழிவில் உள்ள கைதிகள் பரிமாற்ற திட்டத்தின்படி, உயிருடன் உள்ள மற்றும் இறந்துவிட்ட அனைத்து ஆக்கிரமிப்பு கைதிகளையும் விடுவிப்பதற்கு ஒப்புதல் அளிக்கிறோம். இதற்கான அவசியமான கள நிலைமைகளுடன் இந்த பரிமாற்றம் மேற்கொள்ளப்படும். ஆனால், இந்த விவரங்கள் குறித்து விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு நுழைய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் ஹமாஸ் கூறியது.
மேலும், “பலஸ்தீன தேசிய ஒருமித்த கருத்தின் அடிப்படையில், அரபு மற்றும் இஸ்லாமிய ஆதரவுடன், சுயாதீன பலஸ்தீன அமைப்பாளர்களிடம் காசா பகுதியின் நிர்வாகத்தை ஒப்படைக்க தயாராக உள்ளோம்” என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸின் இந்த ஒப்புதல் குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகை உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. இந்த திட்டத்திற்கு இஸ்ரேல், அரபு மற்றும் ஐரோப்பிய சக்திகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
டிரம்ப்பின் திட்டத்தில் உடனடி போர் நிறுத்தம், ஹமாஸ் வைத்திருக்கும் அனைத்து பணயக்கைதிகளையும் இஸ்ரேல் வைத்திருக்கும் பலஸ்தீன கைதிகளுடன் பரிமாற்றம் செய்தல், காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் கட்டம் கட்டமாக வெளியேறுதல், ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுதல் மற்றும் சர்வதேச அமைப்பின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல் ஆகியவை அடங்கும். இந்த திட்டத்திற்கு எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது