கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பாக பெண் சட்டத்தரணி ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இந்தச் சட்டத்தரணி நேற்று (28) இரவு கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி, வழக்கு விசாரணையொன்றிற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ, அந்த நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவத்தின் துப்பாக்கிதாரி அன்றைய தினமே பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதிலும், துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வந்த இஷாரா செவ்வந்தி என்பவரைக் கைது செய்வதற்கு பாதுகாப்புப் பிரிவினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர்.
அதன்போது, அவர் கடந்த 14ஆம் திகதி நேபாளத்தில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
