கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என இலங்கை தமிழ் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 26 ஆண்டுகளாக கொழும்பு புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது. இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கத்தினால் நடத்தப்படும் இக் கண்காட்சியில் சிங்கள மொழி நூல்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.
அத்துடன் தமிழ் மொழி படைப்பாளர்கள், தமிழ் பதிப்பாளர்கள், தமிழ் நுகர்வோர் பல்லாண்டுகளாக பெரும் பாரபட்சங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதை வருத்தத்துடன் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.
அத்துடன் இவ்வாறான புத்தக கண்காட்சிகளில் தமிழ் பேசும் சிங்களப் பேசும் கலைஞர்களுக்கிடையிலான பிணைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
துரதிஷ்டவசமாக தமிழ் படைப்பாளர்கள் போதியளவு புத்தக கடைகள் இல்லாததால் கலந்துகொள்வதில்லை.
கடந்த 26 ஆண்டுகளாகத் தொடரும் இந்த சிக்கல் இனிமேலும் தொடராமல் இருப்பதற்காகவே இந்த வேண்டுகோளை விடுக்கிறோம். இத்தனைகால இந்த நிகழ்வு இலங்கையின் பண்பாட்டு ஒன்றுகூடலாகவும், பண்பாட்டுப் பரிவர்த்தனைக்குமான களமாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.
சிங்கள மொழியில் வருடாந்தம் சுமார் 8000 நூல்கள் வெளியாகின்றன. தமிழில் 500 க்கும் குறைவான நூல்களே வெளியாகி வருகின்றன. இலங்கைத் தீவில் தமிழ் நூல்களுக்கான சந்தை மிகச் சிறியது. அதுமட்டுமன்றி இங்கு வெளியாகும் நூல்கள் பல 300 பிரதிகள் மாத்திரமே பதிக்கப்படும் நிலையே தொடர்கிறது.
இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கம் (SLBPA)ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகளை நெருங்கப் போகிறது. ஆனால் இதுவரை தமிழ் பதிப்பாளர்களை இணைத்துக்கொள்ள போதிய அக்கறை எடுத்துக்கொண்டதில்லை. இன்று 160 பதிப்பாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் இச்சங்கத்தில் ஓரிரு தமிழ் பதிப்பாளர்களே உள்ளனர்.
அதன் தலைமை இயக்குனர் சபையில் இருக்கும் எழுவரிலோ மேலதிக இயக்குனர்களாக இருக்கிற பதினோரு பேரிலோ அல்லது ஆறு பேரைக் கொண்ட ஆலோசனைக் குழுவிலோ ஒருவர் கூட தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை.
இச்சங்கத்தின் இணையத்தளமும் அதன் பதிப்புகளும் கூட ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மட்டுமே உள்ளன.
ஏற்பாட்டாளர்களில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதித்துவப்பட்டிருந்தால் குறைந்த பட்சம் அவர்களின் குரல்கள் அங்கே ஒலித்திருக்கும். குறைகள் அடையாளம் காணப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டிருக்கக் கூடும்.
எனவே தமிழ் பதிப்புப் பரப்பில் ஏற்படுகிற பிரச்சினைகளை வெளியில் கொணர ஒரு அமைப்பாக இந்த சங்கத்தின் மூலம் ஒன்றும் செய்ய முடியாத நிலை தொடர்கிறது.
குறைந்தபட்சம் SLBPA தாம் நடத்தும் சர்வதேச புத்தகக் கண்காட்சியையாவது பாரபட்சமின்றி நடத்தினால் நலிவடைந்திருக்கிற தமிழ் பதிப்பாளர்களுக்கு சிறிய ஆறுதலாவது கிடைக்கும்.
இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறோம்.
•தமிழ் பதிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்வாங்கப் படவேண்டும்
* புத்தக் கண்காட்சியில் உரிய கடைகளை பெறுவதிலிருந்து, உரிய இடங்களை ஒதுக்குவது, வெளியீட்டு, பேச்சு போன்றவற்றுக்கான மேடைகளைப் பெறுவது, தமிழ் அறிவிப்புகள், விளம்பரங்கள், வசதிகள் என எல்லாவற்றிலும் இருக்கும் பாரபட்சம் அகற்றப்படவேண்டும். இப்போது ஒரு வீத தமிழ் கடைகள் கூட கண்காட்சியில் கிடையாது.
* தமிழ் வாசகர்களும் பயனடையக் கூடிய வகையில் தமிழிலும் வழிகாட்டல், விளம்பர பதாகைகள் அமையவேண்டும்.
* மிகப் பெரிய பதிப்பாளர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருக்கிற அனுமதி மாற்றப்படவேண்டும். பதிலாக சிறு கடைக்காரர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களுக்கான குறைந்த கட்டண அறவிடும் முறை கொணரப்படவேண்டும். சிங்கள பதிப்பகங்களுக்கு நிகரான வளர்ச்சியடைந்த பதிப்பாளர்களும்,விநியோகஸ்தர்களும் தமிழ்ச் சூழலில் இல்லை என்பதை கருத்திற் கொள்ளவேண்டும்.
* தமிழ் பேசும் மக்கள் தமது தேவையை அங்கு பெறக்கூடிய வகையில் அங்கே உதவக்கூடிய தமிழ் ஊழியர்களும் அங்கே போதிய அளவு பணிக்கமர்த்தப்படல் வேண்டும்.
* இலங்கைப் பதிப்பாளர்கள் சங்கம் என்கிற பெயரை உடைய ஒரு சங்கம் சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிச் சமூகங்களுக்கும் சமத்துவமான முறையில் இயங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதை ஒரு சிங்கள சங்கமாக வெளியில் உணரப்படும் நிலையை இச்சங்கத்தால் மாற்ற முடியும் என்று நம்புகிறோம்.
* இன்றும் தமிழ் பதிப்பாளர்கள் இலங்கையில் எதிர்நோக்கி வருகிற விசேடமான பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்கான ஒரு அமைப்பும் இலங்கையில் கிடையாது. இனியாவது இவை மாற வேண்டும்.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு : முஹம்மட் சப்ரி (இணைப்பாளர்) – கைப்பேசி இல. – 077 080 7787.