மர்ஹும் அல்ஹாஜ் என்.டி.எச். அப்துல் கபூரினால் உறுதிப் பத்திரம் 2125 இன் கீழ் உருவாக்கப்பட்ட என்.டி.எச். அப்துல் கபூர் அறக்கட்டளை, முஸ்லிம் தர்ம நம்பிக்கை பொறுப்பின் கீழ் உள்வாங்கப்படவில்லை என மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன் வக்பு நியாய சபையின் 273/20ஆம் இலக்க வழக்கின் செயன்முறையினை இடைநிறுத்தவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதியரசர்களான ஆர். குருசிங்க, பீ. சசி மகேந்திரன் மற்றும் ஆர்.பி. ஹெட்டியாராச்சி ஆகியோரைக் கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்ற நீபதிபதிகளினாலேயே கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1935ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி உருவாக்கப்பட்ட இந்த ட்ரஸ்ட் கொழும்பினைச் சேர்ந்த ஜோன் வில்ஸன் எனும் பிரசித்த நொத்தரிசினால் ஆவணப்படுத்தப்பட்டு சான்றழிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு – 13 கிரேண்பாஸ் பிரதேசத்தில் செயற்பட்ட சுலைமான் வைத்தியசாலையின் இரண்டு ஏக்கர் காணியும் மகரகம கபூரியா அரபுக் கல்லூரியுடன் இணைந்ததாக காணப்பட்ட 17 ஏக்கர் காணியும் இந்த அறக்கட்டளையின் கீழ் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த அறக்கட்டளை தொடர்பாக வக்பு நியாயாதிக்க சபையினால் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி இடைக்கால கட்டளையொன்றை வழங்கப்பட்டது.
இதற்கு எதிராக அப்துல் கபூர் அறக்கட்டளையின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
நீண்ட விசாரணைகளின் பின்னர் இந்த மனு மீதான தீர்ப்பு கடந்த ஓகஸ்ட் 28ஆம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் நான்கு மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.