கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய இஸ்லாமிய கலை விழாவொன்று கடந்த மாதம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கள்-எலிய அலிகார் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
வரம்பு வரையறைகள் அற்ற நவீன கலைக் கலாசாரத்தின் காரணமாக முஸ்லிம்கள் கலைகளை விட்டும் தூரப்பட்டு நிற்கும் ஒரு காலத்தில், ஊர் மட்டத்தில் கலையார்வமிக்கவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையிலும், கலைகள், வாசிப்பு, எழுத்து ஆகிய விடயங்களில் ஆர்வம் காட்டாத புதிய பரம்பரையினருக்கு நல்லதொரு தூண்டுதலாகவும் கள்-எலிய கலை விழா அமைந்திருந்தது.
ஊர் மாணவர்கள் மற்றும் பெரியவர்கள், பெண்கள் ஆகியோரின் கஸீதா, இஸ்லாமிய கீதங்கள், நாடகம் மற்றும் மீலாத் கவியரங்கு என்று அனைவரும் ரசிக்கும் வகையில் கலை விழாவின் நிகழ்ச்சி நிரல் அமையப்பெற்றிருந்தது.
மேலும் நிகழ்வின் சிறப்பு அம்சமாக கவிஞர் புத்தளம் மரிக்கார், கவிஞர் கிண்ணியா அமீர் அலி ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றன.
அத்தோடு ‘நபிகளார் வென்ற மண்ணும் மனங்களும்’ என்ற கவிதைத் தொகுப்பும் நூல் ஒன்றும் இக்கலைவிழாவில் வெளியிடப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
ஊர் பள்ளிவாசல் மற்றும் பாடசாலை, உம்மஹாத் பெண்கள் அமைப்பு, தரீகுல் ஜன்னா இளைஞர் அமைப்பு, முநயெடநசவ செய்திச் சேவை என்பவற்றின் ஒத்துழைப்போடும் ஊர் மக்களின் பூரண ஆதரவோடும் கள்-எலிய அல்-அப்ரார் நிறுவனம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியது.
இரவு நேர மின்னொளி வெளிச்சத்தில் முழு ஊரையும் ஒன்றுகூட்டிய இந்நிகழ்வு ஏனைய முஸ்லிம் ஊர்களுக்கும் இஸ்லாமிய கலைவிழாவொன்றை செய்வதற்குரிய நல்லதொரு முன்மாதிரியாகும்.