Thursday, November 26, 2026

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

1 min read

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

இன்றிலிருந்து (24) இலங்கைக்கு வடகிழக்காக உள்ள வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இக்கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பலநாள் மீன்பிடி படகுகளும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.