ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அஹமத் அல் – ஷரா நேரில் சந்தித்துள்ளார்.
சிரியாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த அசாத் குடும்பத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும், முன்னாள் ஜனாதிபதி பஷார் அல் – அசாத் நாட்டை விட்டு தப்பியோடி ரஷியாவில் குடும்பத்துடன் தஞ்சமடைந்தார்.
இந்த நிலையில், சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரி வரும் சிரிய அதிபர் அல் – ஷரா,ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ரஷ்யா ஜனாதிபதி புதினை, இன்று நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் மற்றும் முதலீடுகள் குறித்து உரையாடியதாகக் கூறப்பட்டுள்ளது. இத்துடன், சிரியாவில் உள்ள ரஷ்யாவின் விமானப் படை மற்றும் கடற்படை தளங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளன.
முன்னதாக, சிரியாவில் நீண்டகாலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல் – அசாதின் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவின் படைகள் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.