இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய பங்கு வகித்தன.
கல்வி மற்றும் ஏனைய பொதுச் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்தும் குறைந்த மட்டத்தில் நிலவி வருவதற்கும் அவை பங்களிப்புச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று (15) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் அரசாங்கம், மனித உரிமைகள் தொடர்பான அதன் கடப்பாடுகளை நிறைவேற்றி வைப்பதற்கு உடனடியாக வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதுடன், தற்பொழுது போதிய அளவிலான வருவாய்களை பெற்றுத் தர முடியாத நிலையில் இருந்து வரும் அதே வேளையில், கம்பெனிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் சாதகமாக இருந்து வரும் வரி முறையை மாற்றியமைக்கும் பொருட்டு சீர்திருத்தங்களை எடுத்து வருதல் வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கம்பெனித் துறை வரி விலக்குகள் உயரளவிலான செலவுகளைக் கொண்டிருப்பதுடன், அவற்றின் வினைத்திறன் கேள்விக்குரியதாக இருந்து வருகின்றது.
மேலும், அவற்றை இலகுவில் தவறான விதத்தில் பயன்படுத்தக் கூடிய நிலையும் காணப்படுகின்றது.
மனித உரிமைகளை வலுவூட்டும் பொருட்டு சர்வதேச விதிமுறைகளை கட்டி எழுப்புவதற்கான ஐ.நா வரி ஒப்பந்தம் ஒன்று தொடர்பாக தற்பொழுது இடம்பெற்று வரும் பேச்சு வார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் அறிக்கை எடுத்துக் காட்டுகின்றது.