சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட 5 இலங்கையர்களும் இன்று (15) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
சந்தேகநபர்கள் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 182 ரக விமானத்தின் ஊடாக காத்மண்டுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று மாலை அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக முன்னதாக விசேட அதிரடிப் படையின் 2 அதிகாரிகள் நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றிருந்தனர்.
ஏற்கனவே நேபாளத்தில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) குழுவிற்கு உதவுவதற்காக அவர்கள் இவ்வாறு சென்றிருந்தனர்.
நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, நேபாள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.
இஷாரா செவ்வந்தியுடன் மற்றொரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.