உள்நாட்டு மோதல் நடைபெற்றுவரும் சூடானின் டாா்ஃபா் பகுதியில் நகர மகப்பேறு மருத்துவமனையில் 460-க்கும் மேற்பட்டவா்களை துணை இராணுவப் படையான ஆா்எஸ்எஃப் சுட்டுக் கொன்றதற்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இரண்டு நாள்களுக்குப் பிறகு, நான்கு மருத்துவா்கள், ஒரு செவிலியா், மருந்தாளா் உள்ளிட்ட ஆறு சுகாதார ஊழியா்கள் ஆா்எஸ்எஃப் படையினரால் கடத்தப்பட்டனா்.
மருத்துவமனையில் 460-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் அவா்களுடன் இருந்தவா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இது மிகவும் கண்டனத்துக்குரிய கொடூரச் செயல் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அல்-ஃபாஷரில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள பதற்றம் கவலை அளிக்கிறது.
அந்த நகரின் முற்றுகை மற்றும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், அரேபிய இனத்தவருக்கும், அரேபியா் அல்லாத ஆப்பிரிக்க இனத்தவருக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நிலவி வருகிறது.
அரேபியா் அல்லாதோா் அதிகம் வசிக்கும் டாா்ஃபா் மாகாணத்தில் தங்களது உரிமைகளுக்காக போராடிய மக்களை முன்னாள் அதிபா் மீது அல்-பஷீா் அரசுக்கு உதவியாக முகமது ஹம்தான் டகேலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் படை படுகொலை செய்தது.
இருந்தாலும், அல்-பஷீா் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவரது ஆட்சியை இராணுவம் 2019-ஆம் ஆண்டு கவிழ்த்தது. அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட சிவில்-இராணுவ கூட்டணி அரசையும் அல்-புா்ஹான் தலைமையிலான இராணுவமும், டகோலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் படையும் இணைந்து கவிழ்த்தன.
இந்தச் சூழலில், இராணுவ தளபதி அல்-புா்ஹான், ஆா்எஸ்எஃப் படைத் தலைவா் டகேலாவுக்கு இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில், இதுவரை லட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த டாா்ஃபா் மாகாணத்தின் முக்கிய நகரான அல்-பாஷரை கடந்த சில மாதங்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திவந்த ஆா்எஸ்எஃப் படையினா், அந்த நகருக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்து இராணுவ தலைமையகத்தைக் கைப்பற்றினா்.

