2025 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு சுசமா கிடாகவா, ரிச்சர்ட் ராப்சன், ஓமா யாகி ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.
ஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி முதலில் ஐந்து துறைகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பொருளாதாரம் சேர்க்கப்பட்டது. தற்போது ஆறு துறைகளில் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
முதல் நோபல் பரிசுகள் 1901 ஆம் ஆண்டு வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு தவிர மற்ற பரிசுகள் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமிலும், அமைதிப் பரிசு நார்வே நாட்டின் ஓஸ்லோவிலும் வழங்கப்படுகின்றன. விருதுகள் ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்படுகின்றன. அதன்படி இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த மூவருக்கு வேதியியல் பரிசு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுசமா கிடாகவா, ரிச்சர்ட் ராப்சன், ஓமா யாகி ஆகிய மூவருக்கும் உலோக – கரிம கட்டமைப்புகளின் மேம்பாட்டிற்காக வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுசுமு கிடகாவா ஜப்பானை சேர்ந்தவர். ஜப்பானில் உள்ள கியோடோ நகரில் 1951ம் ஆண்டு பிறந்தவர். வேதியியலில் பிஎச்டி படிப்பை முடித்த இவர் ஜப்பானின் கியோடா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
அதேபோல் ரிச்சர்ட் ராப்சன் பிரிட்டனை சேர்ந்தவர். இவர் 1937 ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள குல்ஸ்பர்ன் நகரில் பிறந்தார். பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் படித்து முடித்தவர்.தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
ஓமர் எம் யாகி ஜோர்டானில் பலஸ்தீனிய பெற்றோருக்கு 1965ம் ஆண்டில் பிறந்தார். பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய நிபுணர்களை இயல்பாக்குவதற்கான அரச ஒப்புதலைத் தொடர்ந்து 2021 இல் சவூதி அரேபியா குடியுரிமை வழங்கப்பட்டது.
தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். மேலம் கவ்லி எனர்ஜி நானோ சயின்ஸ் இன்ஸ்ட்டியூட்டின் நிறுவன இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.