உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (17) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்தியப் பிரதமர் மோடி, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை அன்புடன் வரவேற்றதுடன், இருதரப்பு உறவுகளுக்கும் இரு நாடுகளுக்கும் இடையேயான பன்முக கூட்டாண்மைக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் அவரது இந்த விஜயத்தைப் பாராட்டினார்.
பிரதமர் அமரசூரிய, 1990களின் முற்பகுதியில் ICCR புலமைப் பரிசில் மாணவியாக இருந்த டில்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரிக்கு மேற்கொண்ட தனது உணர்ச்சிபூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் பயணத்தின் விபரங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டார்.
புத்தாக்க கல்வி நடைமுறைகளைக் கண்டறிவதற்கான அர்த்தமுள்ள ஒரு வாய்ப்பாக, டில்லியில் உள்ள ஒரு மாதிரிப் பாடசாலைக்கு முன்னதாக தனது வருகையின் முக்கிய விடயங்களையும் அவர் இந்தியப் பிரதமருடன் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் மோடி இலங்கையின் கல்வி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு தனது ஆதரவைத் தெரிவித்ததுடன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இளைஞர்கள், குறிப்பாக பாடசாலையை விட்டு இடைவிலகியவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்யும் வகையில், ஆண் மாணவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அதிகரித்து வரும் தேவையை வலியுறுத்தி, உள்ளடக்கிய மற்றும் சமமான கல்வி முறையை உருவாக்குவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பகிர்ந்து கொண்டார்.
இரு நாடுகளிலும் மீனவர்களின் நலன் தொடர்பான விடயங்கள் குறித்தும் இரு பிரதமர்களும் கலந்துரையாடியதுடன், இரு தரப்பிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பைப் உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் கலாநிதி அமரசூரிய வலியுறுத்தினார்.
இரு நாடுகளின் பகிரப்பட்ட அபிவிருத்திப் பயணத்தில் கூட்டாண்மையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை முயற்சியை முன்னெடுப்பதிலும் டிஜிட்டல் நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார். அனுராதபுரத்தில் உள்ள புனித நகர வளாகத்தின் அபிவிருத்திக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
தீபாவளிப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அன்பான வாழ்த்துக்களை இந்தியப் பிரதமர் மோடிக்கு தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.