நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, காலி, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, குருநாகல், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, கம்பஹா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் எலிக்காய்ச்சல் பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான மாத்திரைகள் நாட்டில் போதுமான அளவு கிடைப்பதாகவும், நெல் வயல்கள் போன்ற பகுதிகளில் வேலை செய்பவர்கள் முறையாக மருந்தை உட்கொள்ளுமாறும், அமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் மாத்திரைகள் தேவைப்படுவதாகவும், மூன்று மாதங்களுக்குத் தேவையான் மாத்திரைகள் தற்போது கையிருப்பில் இருப்பதாகவும், ஒன்பது மாதங்களுக்குத் தேவையான மற்றொரு இருப்பு விரைவில் பெறப்படும் என்றும் இதன்போது அவர் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.