நேற்றைய தினம் கொழும்பு City of Dreams இல் Y.M.M.A. இன் 75 வது நிறைவு விழா இடம்பெற்றது. இலங்கையில் Y.M.M.A. அமைப்பைத்தாபித்தவர் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் ஆவார்.
இலங்கை சிவில் சேவையில் (C.C.S.) இணைந்த முதல் முஸ்லிம் என்ற பெருமைக்குரிய அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் கண்டியில் கடமையாற்றிய 1944 காலப்பகுதியில், ‘அகில இலங்கை முஸ்லிம் வாலிபப் பேரவை’ கருக்கொண்டது.
1927 இல் எகிப்தில் தாபிக்கப்பட்ட Y.M.M.A.யின் பணிகளாலும் அண்டை நாடுகளில் அது வியாபித்து வளர்ந்த முறையாலும் அஸீஸ் கவரப்பட்டார்.
1947 இல் அஸீஸ் அவர்கள் தமது மனைவியுடன் இங்கிலாந்துக்குச் சென்றவேளை சில நாட்கள் எகிப்திலும் தங்கியிருந்தார். அவ்வேளை கெய்ரோ Y.M.M.A. க்கும் அவர் விஜயம்செய்து அதன் கட்டமைப்பு, செயற்பாடுகள் போன்றவற்றை அனுபவபூர்வமாக அறிந்துகொண்டார்.
இலங்கை நிருவாக சேவையின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றிய அஸீஸ், 1948 இல், தனது முப்பத்து ஏழாவது வயதில் அதனைக் கைவிட்டு, கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியைப் பொறுப்பேற்றதுடன் தனது கவனத்தை Y.M.M.A மீதும் குவிக்கத் தொடங்கினார்.
1950 காலப்பகுதியில் பல Y.M.M.A. க்கள் தொடங்கப்பட்டு, தனித்தனியாகச் செயற்பட்டுவந்தன. இந்தநிலையில் 1950 ஏப்ரல் 30 அன்று ஸாஹிறாக் கல்லூரியில் பதினேழு Y.M.M.A க்களின் 67 பேராளர்கள் ஒன்றுகூடினர். அன்று உருவானதே ‘அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவை’ (All Ceylon YMMA Conference) ஆகும்.
Z.A Zanhir
ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்.