மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய நிறுவனங்கள் நிதிபற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், அரசு நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் ஆட்சியாளர்களின் ஊழலை எதிர்த்து, மொராக்கோவின் முக்கிய நகரங்களில் ஜென் – ஸி என்றழைக்கப்படும் இளம்தலைமுறையினர் கடந்த 5 நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, லெகிலா நகரத்தில் நேற்று (01) மாலை நடைபெற்ற போராட்டத்தில், மொராக்கோ காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்ட இருவரும் பொலிஸாரின் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிக்க முயன்றதாகவும்; அதனால், தற்காப்பிற்காக மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இருப்பினும், தலைவர்கள் யாருமின்றி இணையதளம் வாயிலாக பரவிய செய்திகளின் மூலம் ஒன்று திரண்டு வீதிகளில் இறங்கி போராடி வரும் இளம்தலைமுறையினரை, பொலிஸார் தொடர்ந்து கைது செய்து வருவதால் பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்துள்ளது.
மேலும், சேல் நகரத்தில் முகமூடி அணிந்த இளைஞர்கள் சிலர் அங்குள்ள வாகனங்கள் மீது தீவைப்பது மற்றும் வங்கிகள், கடைகள் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்துவது போன்ற விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம், நேபாள நாட்டில் சமூக ஊடகங்கள் மீதான தடை மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து ஜென் – ஸி தலைமுறையினர் நடத்திய மாபெரும் போராட்டத்தின் மூலம், அப்போதைய பிரதமர் சர்மா ஓலி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.