தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நேற்று (25) நள்ளிரவில் இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டிருந்ததோடு, அடுத்த 30 மணித்தியாலங்களில் அது ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இத்தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் எதிர்வரும் சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.
இன்றையதினம் (26) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ. இற்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நேற்று (25) நள்ளிரவில் இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டிருந்தது. அது அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு வடக்கு முதல் வரையான திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பு முதல் மிகவும் கொந்தளிப்பு வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து காலி, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல).
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
