குர்ஆனின் மொழியில் அறிவியல் பேசிய குரல் மறைந்தது!

Date:

முஹம்மத் பகீஹுத்தீன்

பேரறிஞர் டாக்டர் ஸக்லூல் ராகிப் முஹம்மத் அல் நஜ்ஜார் (1933 – 2025) அவர்கள் மறைந்த செய்தி எட்டியதும் இதயம் கனத்தது.

இனி அவருடைய சிந்தனை வானில் சிறகடிக்கும் அறிவியல் துளிகளை காணமுடியாது என்ற ஏக்கம் உள்ளத்தைக் கவ்வியது.

அறிவியலும் ஈமானும் மோதிக் கொண்டிருக்கும் இவ்வுலகில், குர்ஆனின் மொழியில் அறிவியல் பேசிய ஓர் உயர்ந்த குரலாக அவர் பிறந்தார்.

அமைதியுடனும் உறுதியுடனும் உலகை உலுக்கிய அந்தக் குரல், புதிய கண்டுபிடிப்புகளும் விஞ்ஞான உண்மைகளும் குர்ஆனிய சிந்தனைக்கு அச்சுறுத்தலல்ல, மாறாக அதன் உண்மையை உறுதிப்படுத்தும் சான்றுகளே என தெளிவாக எடுத்துரைத்தது.

சிந்தனை தெளிவுடன், அமைதியாகவும் ஆனால் ஆழமான கருத்துக்களை உறுதியுடன் பகர்ந்த அந்தக் குரலின் சொந்தக்காரர் — ஒரு புவியியல் அறிஞர், உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய சிந்தனையாளர், அல் குர்ஆனின் அறிவியல் அற்புதங்களை சான்றோடு பகர்ந்த பன்முக நூலாசிரியர் — அவர்தான் கலாநிதி டாக்டர் ஸக்லூல் ராகிப் அல் நஜ்ஜார்.

மறைந்த பேரறிஞர், அல் குர்ஆனில் உள்ள அறிவியல் அற்புதங்கள் என்ற துறையின் அடித்தளத்தை வலுப்படுத்திய முன்னோடியாக திகழ்ந்தார்.

ஆயிரக்கணக்கான உள்ளங்களை தீண்டிய அவரது படைப்புகள் என் இதயத்திலும் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தின.

2008 ஆம் ஆண்டு முதன்முதலில் அவருடைய அறிமுகம் கிடைத்தது. பலமுறை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தபோதும் தனிப்பட்ட முறையில் உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அவர் அல்குர்ஆனை விளக்கும் வித்தியாசமான அணுகுமுறை என் உள்ளத்தை ஈர்த்தது. ஒரு சூராவையோ அல்லது குர்ஆனின் ஒரு பகுதியையோ எடுத்துக் கொண்டால் முதலில் அதன் சாராம்சத்தை சுருக்கமாக விளக்குவார்.

கடினமான வசனங்களை விளக்கி, கருத்து முரண்பாடுகள் தோன்றும் இடங்களில் வலுவான கருத்துக்களை மிக எளிமையாக முன்வைப்பார். அறிவியல் உண்மைகளை இறைவனின் இருப்பின் சான்றாக எடுத்துக்காட்டுவார்.

அவர் பேசும் வார்த்தைகளின் ஒளிநயம், அவரது எழுத்துக்களிலும் பிரதிபலித்தது. அறிவியல் வசனங்களைப் புரிந்துகொள்ள அவரது நூல்களை நாடி சென்ற ஒரு மாணவனாகவே நான் வாழ்ந்து வந்தேன்.

அவரது அரிய பங்களிப்புகள் அனைத்தும் — அறிவியலை அல்லாஹ்வை அடையும் பாலமாக மாற்றி, ஒவ்வொரு அறிவியல் உண்மையையும் அல்லாஹ்வை புரிந்து கொள்ளும் அற்புதச் சான்றாக விளக்கின. அவரது எழுத்துக்களும் சொற்பொழிவுகளும் அறிவின் நயமும் ஈமானின் ஆழமும் ஒன்றிணைந்த கலவையாக சுவை தந்தன.

மர்ஹும் ஸக்லூல் ராகிப் முஹம்மத் அல் நஜ்ஜார் அவர்கள் 1933 ஆம் ஆண்டு எகிப்தில் பிறந்தார். 2025 நவம்பர் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஜோர்டானில் காலமானார். 92 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்து, புவி பற்றிய பல அறிவியல் உண்மைகளை பசித்த உள்ளங்களுக்கு விருந்தாக தந்து, தனது படைப்பாளனிடம் அமைதியாக மீண்டு சென்றார்.

அவர் எழுதிய நூல்கள் பல. அவை அனைத்தும் அறிவியலின் நுட்பத்தையும் ஈமானின் ஆழத்தையும் இணைத்த கலவையாக மலர்ந்தவை. அவரது சிந்தனையில் மலர்ந்த சில அரிய துளிகள்:

‘அல் குர்ஆனில் பூமி, “பிரபஞ்சத்திலும் உள்ளங்களிலும் அல்லாஹ்வின் நியதிகள்” “சத்தியத்திற்கும் மாயைக்கும் இடையில் அறிவியல் அற்புதம்” “அல் குர்ஆனில் அறிவியல் அற்புத வசனங்கள்” — இப்படிப்பட்ட பல அற்புத நூல்களை உலகிற்கு வழங்கிய உத்தமரை இன்று இழந்து நிற்கின்றோம்.

அவர் எப்போதும் வலியுறுத்திய கருத்து: ‘குர்ஆன் என்பது அறிவியல் புத்தகம் அல்ல அது வழிகாட்டும் ஒளிவிளக்கு. ஆனால் அது எந்த நிறுவப்பட்ட அறிவியல் உண்மைக்கும் முரண்படாது மாறாக சிந்தனைக்கான கதவுகளைத் திறக்கிறது.

ஈமான் என்பது அறிவுக்கு எதிரானது அல்ல — அது அறிவை முழுமைப்படுத்துவதாகும் என எப்போதும் வலியுறுத்தியவர்.

பேரறிஞர் ஸக்லூல் நஜ்ஜார் அவர்களின் மறைவு கண்களை குளமாக்குகிறது, உள்ளத்தை கனமாக்குகிறது. ஆனால் எமது நாவு சொல்லுகிறது — ‘நாங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவாம்.

யா அல்லாஹ்! உனது அடியான் ஸக்லூல் நஜ்ஜார் மீது கருணை புரிவாயாக.

அவரது பாவங்களை மன்னித்து, உயர்ந்த சுவனத்தை வழங்குவாயாக. அவருடைய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும், அவருடைய மாணவர்களுக்கும், அவரை நேசித்த அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பொறுமையையும் மனநிறைவையும் அருள்வாயாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலினை சந்தித்தார் ரவூப் ஹக்கீம்

இந்தியாவின், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை, ஸ்ரீ லங்கா முஸ்லிம்...

தலாவ பகுதியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 06 பேர் உயிரிழப்பு!

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து...

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரை: இலங்கை- சவூதி அரேபியா ஒப்பந்தம் கைச்சாத்து.

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஒப்பந்தம் இலங்கை சவூதி அரேபியாவிற்கிடையில் கைசாத்திடப்பட்டது. நேற்று...

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி  விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்காலங்களில் மாணவர்கள் மற்றும்...