இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி குறித்த வடமேல் மாகாண சர்வமத அமைப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று (25) குருநாகல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய சமாதான பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ஆர். ரத்நாயக்க மேலதிக செயலாளர் என்.ஏ.ஏ.எஸ் பிரியங்கர அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
புத்தளம் மாவட்டத்தையும் குருநாகல் மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சர்வ மதத்தலைவர்களும் சர்வமத அமைப்பின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தேசிய சமாதான பேரவையின் திட்ட முகாமையாளர் நிரோஷா ஆண்டனி, தேசிய சமாதானப் பேரவை மாவட்ட சர்வமத அமைப்புக்களினூடாகவும் இன்னும் பல சிவில் சமூக அமைப்புக்களினூடகவும் 16 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்கப்பணிகள் சமாதான முயற்சிகள் இனங்களுக்கிடையிலான சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான பணிகள் குறித்த விரிவான ஒரு விளக்கத்தை வழங்கினார்.
பல்லின மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில் இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த பல வருடங்களாக தேசிய சமாதான பேரவை மாவட்ட ரீதியில் சர்வ மத அமைப்புக்களையும் பல சமூக நிறுவனங்களையும் நிறுவி அவற்றுடன் கைகோர்த்துக்கொண்டு இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
இந்தவகையில் இங்கு கலந்துகொண்ட இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த மதத்தலைவர்களும் ஏனைய பிரமுகர்களும் இப்பிரதேசங்களில் சமாதான நல்லிணக்க முயய்சிகளை தொடர்ந்தும் நடாத்தப்படுவதற்கான பங்களிப்புக்கள் சம்பந்தமாகவும் சமாதான முயற்சிகளில் ஏற்படுகின்ற இடையூறுகள் சம்பந்தமாகவும் பிரஸ்தாபித்ததோடு அவற்றுகான தீர்வுகள் குறித்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினர்.
மேற்படி கலந்துரையாடலில் பின்வரும் விடயங்களுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு புத்தளம் சர்வ சமய தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
1.புத்தளம் அறுவக்காட்டு பகுதியில் கொண்டு வந்து கொட்டப்பட உள்ள குப்பைகளால் புத்தளம் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் சம்பந்தமாக அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி அதனை தவிர்த்தல்.
2. புத்தளம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக, விவாகரத்து சான்றிதழ்களை சிங்கள மொழியில் மட்டும் எழுதுமாறு நிர்பந்திப்பதை தவிரத்தல்.
3. சில அரச அலுவலகங்களில் சிங்களத்தில் மட்டும் கடிதத் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு உத்தியோகத்தர்களை நிர்பந்திப்பதை தவிர்த்தல்.
காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வு வடமேல் மாகாணத்தில் சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பையும் தேவையையும் மேலும் உணர்த்துகின்ற ஓர் நிகழ்வாக அமைந்தது.

