U.S. News & World Report ஊடகத்தினால் 2026 ஆம் ஆண்டில் “ஆசியாவில் சுற்றுப்பயணம் செய்ய சிறந்த ஐந்து இடங்களுக்குள்” (Top 5 Best Places to Visit in Asia) இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசியப் பிராந்தியத்தின் ஏனைய முக்கிய சுற்றுலா மையங்களைப் பின்னுக்குத் தள்ளி இலங்கை இந்த இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் “பல்வகைப்பட்ட சுற்றுலா அனுபவங்கள்” (Diversified travel experiences) இதன்போது விசேடமாகப் பாராட்டப்பட்டுள்ளன.
தரவு பகுப்பாய்வுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்கான வசதி மற்றும் கட்டுப்படியாகக்கூடிய செலவு, கலாசாரம் மற்றும் உணவு வகைகளின் செழுமை, சுற்றுலா ஈர்ப்பு இடங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பம் ஆகிய காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையின் உலகத் தரம் வாய்ந்த கடற்கரைகள், யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட பண்டைய பாரம்பரிய இடங்கள் மற்றும் சிறந்த வனவிலங்கு சஃபாரி (Wildlife Safari) அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இனிமேல் பிராந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான ஒரு துணைத் தங்குமிடம் (Secondary stop) அல்ல என்றும், அது ஒரு “முழுமையான சுற்றுலா இலக்காக” (Stand-alone destination) மாறியுள்ளதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
40 நாடுகளுக்கான புதிய இலவச விசா கொள்கை, சொகுசுச் சூழல் சுற்றுலா (Eco-tourism) மற்றும் அழகான புகையிரத பயண அனுபவங்களின் விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம், 2026 ஆம் ஆண்டில் சாதனை அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை இலக்கு வைத்துள்ள நிலையில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
