நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 2025 ஆம் ஆண்டிற்காக அடையாளம் காணப்பட்ட 07 புதிய தயாரிப்புகள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனம் தனது பணிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் பின்வரும் தயாரிப்புகளை நாளை அறிமுகம் செய்கிறது:
மருத்துவ தயாரிப்புகள்: குப்ஜ பிரசாரணி தைலம், பலா கோரண்ட தைலம், பஞ்சவல்கல சூரணம், சன்ஸ்தா போன் மெரோ (எலும்பு மஜ்ஜை) பத்து.
மூலிகைத் தயாரிப்புகள்: பிண்ட பாம் (Pinda Balm), செஞ்சந்தன பாடிலொஷ் (Red Sandalwood Body Wash), பஞ்சவல்கல ஷாம்பு.
மருந்து விநியோக நடவடிக்கைகளில் அரச துறை முன்னணியில் உள்ளது. எனவே, 2024 ஆம் ஆண்டில் அதிக கொள்வனவுகளை மேற்கொண்ட அரச நிறுவனங்களை மதிப்பீடு செய்து கௌரவிப்பதும் இதனுடன் இணைந்ததாக இடம்பெறும்.
தற்போது 194 தயாரிப்புகள் மற்றும் சுமார் 450 உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ள இக்கூட்டுத்தாபனம், ஆயுர்வேத மருந்து உற்பத்தியில் முன்னோடியாகத் திகழ்கிறது.
56 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இக்கூட்டுத்தாபனம், நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகள், மருந்தகங்கள், வைத்தியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருந்து மற்றும் மூலிகைத் தயாரிப்புகளை விநியோகித்து தேசிய சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் கீதாமணி சி. கருணாரத்ன, மேலாண்மைப் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஜே. மாரசிங்க மற்றும் சுகாதார, ஊடக அமைச்சின் அதிகாரிகள், ஆயுர்வேத திணைக்கள அதிகாரிகள், பல்கலைக்கழக ஆயுர்வேத பீடாதிபதிகள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
