2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தமது விசேட உரையினை நிகழ்த்தினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் நாடு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. பலர் உயிரை இழந்திருக்கின்றார்கள். பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். இது மிகுந்த கவலைக்குரிய விடயம். உயிரிழந்தவர்களை திருப்பி தருவது என்பது இயலாதது.
அதைவிட காணாமல் போனோரை எண்ணி, அவர்களது குடும்பத்தார் என்றாவது வருவார்கள் என்று தினம் தினம் வலியோடு கடக்க வேண்டிய நிலை இருக்கும்.
இதனை நாங்கள் கடந்த கால யுத்தத்தின் போது அதிகமாக உணர்ந்திருக்கின்றோம். இந்த அனர்த்தத்தின் போது இலங்கை மக்களின் முழுமையான மனிதாபிமானத்தை நாங்கள் கண்டிருக்கின்றோம்.
எந்தவொரு அனர்த்தத்தினாலும் வீழ்த்த முடியதாத உறுதியான மனிதாபிமானத்தை நாங்கள் கண்டிருக்கின்றோம். ஒரு நாட்டை கட்டியெழுப்ப மக்களின் அபிலாசைகளே முக்கியத்துவமிக்கது.
நாட்டை மீட்டெடுக்க எமது இராணுவத்தினர் கடுமையான சிக்கல்களை எதிர்நோக்கி துணிகரமான செயலில் ஈடுப்பட்டுள்ளனர். நாட்டு மக்களுக்கு நாம் அர்பணிப்புடன் செயற்படுகின்றோம்.
அனர்த்தத்தின் போது உயிர்கள் இழக்கப்படும். ஆனால் இலங்கை மக்களின் மனிதாபிமானத்தை எவ்வித அனர்த்தத்தாலும் தாக்க முடியாது. எமது நாட்டின் சிறு பிள்ளைகள் தாங்கள் சேர்த்து வைத்த சிறு உண்டியலில் இருக்கும் பணத்தை நிவாரணப் பணிகளுக்காக கொடுத்திருக்கின்றனர்.
எமது நாட்டில் ஒரு தந்தை தன்னுடைய தோட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு வாழைக் குழையை நிவாரணமாக கொடுக்கத் தயாராக இருந்தார். இப்படி உறுதியான மனிதாபிமானமுடைய மக்களை எமது நாடு கொண்டிருக்கின்றது. இதுவே இலங்கையின் தற்போதைய உறுதிநிலை.
இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறை என்று அறிவித்த போது, கேட்டதை விட பல மடங்கு இரத்ததானம் செய்தனர் எமது மக்கள். அழித்துவிட முடியாத உறுதியான மனிதாபிமானம் எம்மிடம் உள்ளது என்பதை எம்மக்கள் நிரூபித்தனர். ஆனால், நான் கண்டிருந்தேன் சில நபர்கள் அந்த மனிதாபிமானத்தை கேலிக்குட்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தனர்.
கலாவேவ பகுதியில் வெள்ளத்தில் பேருந்தொன்று அடித்துச் செல்லப்பட்ட பிறகு அவர்களை காப்பாற்ற எமது படையினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால், முகப்புத்தகத்தில் விமர்சிக்கும் பலர் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒரு முறை, இப்போது ஒரு மணித்தியாலம், இப்போது இரு மணித்தியாலம், இப்போது மூன்று மணித்தியாலம் என்று மீட்பு பணியை கேலிக்குட்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், அப்போதும் எமது தாய் நாட்டின் படையினர் மீட்பு பணியை விடாது தொடர்ந்து அவர்களை மீட்டெடுத்தனர்.
துணிகரமான நடவடிக்கைகளை அப்போது கடற்படையினர் மேற்கொண்டு பேருந்தில் இருந்த அனைவரையும் ஒரு வீட்டின் கூரை மீது ஏற்றி காப்பாற்றினர். மாவிலாறு அணை உடைப்பெடுக்கப் போவதாக அதிகாலை 3 மணிக்கு தகவல் வந்தது.
உடனடியாக செயற்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். அப்போது, இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார் உள்ளிட்ட எமது படையினர் விரைவாக செயற்பட்டு வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்களை எழுப்பி, சேருவில பௌத்த விகாரைக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.
விகாரை உயர்வான பிரதேசத்தில் இருந்ததன் காரணமாக, அங்கு ஆயிரக்கணக்கானவர்களை எம்மால் பாதுகாப்பாக தங்க வைக்க முடிந்தது. வீடுகளை இழந்துள்ள, அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னதாக 10000 ரூபா வழங்குவதாக தீர்மானிக்கப்பட்ட வெள்ள உதவி தொகை 25000 ரூபாவாக அதிகரித்துள்ளோம். அது தொடர்பில் இன்று சுற்றறிக்கை வெளிப்படுத்தப்படும். ஒரு சிலர் முகாம்களில் உள்ளனர்.
அவர்கள் அங்கு இருப்பதை விரும்பாவிட்டால் 6 மாதங்களுக்கு இந்த உதவித்தொகையை பெற்று வாடகை அடிப்படையில் விரும்பிய வீட்டுக்கு செல்லாம்.
ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது 3 பேர் இருந்தால் 25000 ரூபாவாகவும் அதை விட அதிகமாக இருந்தால் அதனை ஆராய்ந்து 50000ரூபா வரை அதை அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம்.
உறவினர் அல்லாத, இதுவரை முகங்களைக் காணாத நபர்களுடைய வீட்டையும் கிணறுகளையும் சுத்தம் செய்வதற்காக ஹம்பாந்தோட்டையிலி ருந்து கண்டிக்கும் மாத்தறையில் இருந்து கண்டிக்கும் காலியிலிருந்து நுவரெலியாயாவுக்கும் சென்று தனது உறவுகளாகப் பார்த்து மனமுவந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மனிதாபிமான உதவிகளை எந்த பேரனர்த்தத்தாலும் அழிக்க முடியாது.
அத்துடன் எதிர்க்கட்சியில் சிலர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது. அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்தியது தொடர்பில் அந்த கேள்விகள் எழுப்பப்பட்டன.
அவசரகாலச் சட்டம் முறையாகவே அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அது முறையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
அதேபோன்று பாராளுமன்ற சிறப்புரிமையை கவசமாக வைத்துக் கொண்டு சிலர் தவறான தகவல்களை பாராளுமன்றத்தில் தெரிவித்தனர். இந்த அனர்த்தத்தின் போது கம்பளையில் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக எதிர்க் கட்சி எம்பி ஒருவர் இங்கு தெரிவித்தார்.
வெளியில் அவர் அவ்வாறு கூறியிருந்தால் வழக்குத் தொடர முடியும். அத்துடன் அரச அதிகாரிகள் பயத்துடன் செயற்படுவதாக சிலர் தெரிவித்தார்கள். அவ்வாறு கிடையாது. நேர்மையாக செயல்படும் அனைத்து அரச அதிகாரிகளையும் அரசாங்கம் பாதுகாக்கும். அவர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்தே அவர்களுக்கு அரசாங்கம் நிதி வழங்கியுள்ளது என்பதை குறிப்பிட வேண்டும்.
தற்போது இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு வீட்டு வசதிகள் உட்பட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. பொருளாதார பிரச்சனைகள் எமக்கு உள்ள போதும் நாம் மிகுந்த கவனத்துடன் முகாமைத்துவத்துடன் அதனை முன்னெடுத்து வருகின்றோம். அரசாங்கம் கவிழும் என பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எதிர்பார்ப்புடன் இருந்தவர்களும் உள்ளனர்.
அவ்வாறானவர்கள் தொடர்பில் நாம் வெட்கப்பட வேண்டும். குரோத மனப்பான்மையுடன் செயற்பட்ட சிலருக்கு மத்தியில் நல்லவர்களும் உள்ளனர் அவர்களுக்கு எமது நன்றிகள்.
