12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக, கத்தார் நாட்டின் தோஹாவில் அரபு மொழி வரலாற்றில் இதுவரை முன்னெடுக்கப்படாத ஒரு மாபெரும் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம்’ என அழைக்கப்படும் இந்தப் பெரும் முயற்சி, அரபு மொழியின் வரலாற்றுப் பயணம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட சொற்கள், அவற்றின் அர்த்த விளக்கங்கள், மொழி வளர்ச்சி கட்டங்கள் ஆகியவற்றை முறையாக ஆவணப்படுத்தியுள்ளது.
10 கோடிக்கும் அதிகமான சொற்கள் அடங்கிய இந்தத் தொகுப்பு, அரபு மொழி வரலாற்றில் மிகச்சிறந்த மற்றும் விரிவான கலைக்களஞ்சியமாக கருதப்படுகிறது.
விரிவான வரலாற்று மற்றும் குறிப்பு அகராதிகளுடன் கூடிய இந்தத் திட்டம், உலகின் முக்கிய மொழிகளின் வரிசையில் அரபு மொழியை அதன் சரியான இடத்தில் நிலைநிறுத்துகிறது.
இதன் மூலம் மொழிக்கு உறுதியான அறிவியல் அடித்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் அறிவின் காலகட்டத்தில் அரபு மொழி நம்பிக்கையுடனும் திறம்படவும் முன்னேற உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
