நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நூற்றாண்டு விழா இன்று (டிசம்பர் 16) சிறப்பாக நடைபெறுகிறது.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, இந்நிகழ்வில், சியக் நாமக் என்ற தலைப்பில் இரவு முழுவதும் பக்தி சொற்பொழிவு மற்றும் விரிவான சங்க தக்ஷிணை ஆகியவை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெறும்.
விழாவில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவும் பங்கேற்க உள்ளனர்.
மேலும், நிறுவன முன்னேற்றத்திற்கு பங்களித்த புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள், பொறியாளர்கள், நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் கூட்டுத்தாபன ஊழியர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு SLBC-க்கு மரியாதை செலுத்துவார்கள்.
இந்த விழா, SLBC வின் ஒரு நூற்றாண்டுக்கால முன்னேற்றமும், ஊடக வரலாற்றில் அதன் முக்கியத்துவமும் சிறப்பாக வெளிப்படுத்தும் விழாவாக இருக்கிறது.
922 இல் பிபிசி ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களில் இலங்கையிலும் நவம்பர் மாதம் சிலோன் வயர்லஸ் கிளப் ஆரம்பிக்கப்பட்டு ஒலிபரப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1923 ஜூலையில் சிலோன் அமெச்சூர் ரேடியோ சொஸைட்டி என்ற அமைப்பு இலங்கைத் தொலைத் தொடர்பு திணைக்களத்துடன் இணைந்து இந்த முயற்சியைப் பூர்த்தி செய்தது.
முதலாவது பரீட்சார்த்த ஒலிபரப்பு 1924 பெப்ரவரி 22 ஆம் திகதியும் இரண்டாவது 1924 ஜூன் 27 இலும் மேற்கொள்ளப்பட்டன. இது வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ட்ரான்ஸ்மிட்டர்கள் வரவழைக்கப்பட்டு 1925 டிசம்பர் 16 ஆம் திகதி இலங்கையின் தேசாதிபதி சேர் ஹியு கிளிபர்ட்டினால் கொழும்பு வானொலி என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
மத்திய தந்திக் கந்தோர் கட்டடத்தில் ஆரம்பித்த வானொலிச் சேவையின் கலையகம் 1926 இல் கொழும்பு பல்கலைக் கழகக் கல்லூரியில் ஓராண்டு இயங்கி பின்னர் ரேஸ் கோர்ஸுக்கு அருகில் தற்போதுள்ள டொரிங்டன் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
இரண்டாவது உலக மகா யுத்தத்துக்காக விமான ஓடுதளம் அமைக்க வேண்டியிருந்ததால் 1939 இல் மீண்டும் கொட்டா ரோடிலுள்ள கட்டடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யுத்தம் முடிந்ததும் மீண்டும் டொரிங்டனுக்கு மாற்றப்பட்டு கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1949 ஒக்டோபர் முதல் இது இலங்கை வானொலியாக தனியான திணைக்களமாக மாற்றப்பட்டு முதலாவது பிரதானியாக பிபிசியின் ஜோன் எம் லாம்சன் நியமிக்கப்பட்டார். 1950 முதல் இலங்கை வானொலி டொரிங்டன் கட்டடத்தில் இயங்கி வருகிறது.
அரசாங்கத்தின் திணைக்களமாக இயங்கி வந்த ஒலிபரப்புச் சேவை 1967 ஜனவரி 5 இலிருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாறியது. முதல் பணிப்பாளர் நாயகமாக நெவில் ஜயவீர நியமிக்கப்பட்டார்.
இவ்வாறு தென்கிழக்காசியாவிலேயே முதலாவது வானொலி நிலையம் இலங்கையில் உருவாக்கப்பட்டதும் தென்கிழக்காசியாவிலேயே முதன் முறையாக நூற்றாண்டு கொண்டாடும் வானொலியாக இலங்கை வானொலி இன்று பெயரெடுத்திருப்பதும் இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் விடயங்களாகும்.
