சிரேஷ்ட விரிவுரையாளர்
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா.
ஒரு சமூகம் அது வாழ்ந்து முடிவதெற்கென்று பொதுவாக எதிர்பார்க்கப்படும் கால எல்லைக்கு முன்னர் ஏதோ ஒரு வகையில் அழிக்கப்படுவதாயின் அதற்குப் பல நியாயங்கள் இருப்பதை குர்ஆனிய ஆய்வைச் செய்யும் போது புரிய முடியும். ஒரு சில உதாரணங்கள் வருமாறு.
1.ஆடம்பரம் அதிகரித்தல் : ‘நாம் ஒரு நகரத்தை அழிக்க நாட்டினால் அதில் படாடோபமாக வாழ்வோரது தொகையை அதிகரித்து விடுவோம். அவர்கள் அங்கே பாவச் செயல்களில் ஈடுபடுவர். அப்போது அவ்வூர் மீது தண்டனை விதியாகும். உடனடியாக மிகக் கொடூரமாக அவர்களை நாம் தரைமட்டமாக்குவோம்’. (இஸ்ரா – 17)
2. ஆடம்பரத்துடனான மமதை :- காரூன் தனக்கு அல்லாஹ் வழங்கிய செல்வ பாக்கியத்தை வைத்து தலைகால் தெரியாது நடக்க ஆரம்பித்தான். அதனால் அவனையும் அவனது வீட்டையும் சேர்த்து அல்லாஹ் பூமிக்குள் இழுத்துவிட்டான். இக்கருத்து சூரா கஸஸில் தெரிவிக்கப்படுகின்றது.
3.ஒழுக்க வீழ்ச்சி : ஆணும் பெண்ணும் சட்டபூர்வமாக குடும்ப வாழ்க்கையில் இணைந்து தத்தமது ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள அல்லாஹ் கட்டளையிட்டிருக்க துர்நடத்தைகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர். நபி லூத் (அலை) அவர்களது சமூகம் தண்டிக்கப்பட்ட விதம் பற்றி குர்ஆன் ‘அவர்கள் வாழ்ந்த அந்தக் கிராமத்தின் மேல் பகுதியை கீழ்ப் பகுதியாக (தலைகீழாகப் புரட்டி) விட்டோம். தொடர்ந்தும் அவர்கள் மீது நாம் சுடும் களிக்கற்களை மழையாகப் பெய்வித்தோம்’ (ஹுத் – 83) எனத் தெரிவிக்கின்றது.
4.வியாபார மோசடி : குறிப்பாக ஷுஐப் (அலை) அவர்களது சமூகம் அளவை நிறுவையில் மோசடி வாழ்ந்த போது அவ்வாறு செய்வது கடும் பாவச்செயல் எனக்கூறி அந்த நபி தடுத்தார்கள். ஆனால் தனது சொத்து செல்வங்களை எப்படி சேகரிப்பது, பாதுகாப்பது, செலவழிப்பது ஆகிய விடயங்களில் நபி தலையீடு செய்யக்கூடாது என்பதில் அந்த சமூகத்தினர் பிடிவாதமாக இருந்தனர்.
நபியை அற்பராகக் கருதி ஏளனம் செய்தனர்.அதுபற்றி கவலைப்படாத நபியவர்கள் ‘நீங்கள் அல்லாஹ்வை உங்களது முதுகுக்கு பின் தூக்கி எறிந்தது போல் ஆக்கிவிட்டீர்களா? நீங்கள் செய்பவற்றை எனது இரட்சகன் நன்கு சூழ்ந்திருக்கிறான்’ என்றார்கள். அவர்களது அட்டூழியம் தொடர்ந்த போது ‘அநியாயம் செய்தவர்களை (வானுலகிலிருந்து வந்த) கடும் சத்தம் தாக்கியது. அவர்கள் தமது வீடுகளில் முகப்புற உயிரற்று விழுந்து கிடந்தார்கள்’ (ஹுத் – 94) என்றான்.
5. அரச அராஜகம் : சத்தியவாதிகளது குரலை ஒழிப்பதற்கு முயற்சி செய்து, பலவீனர்களை அடக்கி ஒடுக்கும், ஆட்சிக்கட்டிலில் உள்ள கும்பல்கள் அழிக்கப்பட்டன. அந்த வகையில் பிர்அவ்னும் அவனது பிரதானிகளும் படைகளும் மூஸா(அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் சொல்லனாத் துயரங்களுக்கு உள்ளாக்கினர். எனவே, அல்லாஹ் கடலைப் பிளந்து, நபியையும் அவர் சமூகத்தையும் காப்பாற்றி கரை சேர்த்தான். அவர்கள் கரைசேரும் வரை பிளந்திருந்த கடல் இராட்சத மலைபோல் இருமருங்கிலும் எழுந்து நின்று வழிவிட்டது. இதே கடலுக்குள்ளால் நடந்து சென்ற பிர்அவ்னின் படைகள் மூழ்கடிக்கப்பட்டதாக குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. (அஷ்ஷுஅரா – 10-68)
6. உலக வாழ்வை அளவு கடந்து நேசிப்பது : ‘உலக வாழ்வு ஒரு சோதனைக் கூடம் என்பதனையோ தமக்குத் தரப்பட்டுள்ள ஆற்றல்கள் அல்லாஹ்வின் அமானிதங்கள் என்பதையோ மறந்து பரஸ்பர போட்டி போட்டு மாடமாளிகைகளைக் கட்டி தம்பட்டமடிப்பதில் மூழ்கியிருந்த, அட்டூழியங்கள் புரிந்து வாழ்ந்த ஆத் சமூகத்தினர் ஹுத் (அலை) அவர்களது போதனைகளை முற்று முழுதாக நிராகரித்து வாழ்ந்தனர். ‘எனவே எமது அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தவர்களை பூண்டோடு நாம் அழித்தோம்’ (அஃராப் – 72) என அல்லாஹ் கூறுகிறான்.
அதேபோல் ஸாலிஹ் (அலை) அவர்களது தமூத் கூட்டத்தார் மலைகளைக்குடைந்து மமதையுடன் வாழ்ந்து வந்தனர். தமக்குக் கிடைத்த தோட்டம் துறவுகள் தமக்கு நிரந்தரமாக இருக்கும் என அவர்கள் நினைத்தனர். நபியைப் பொய்ப்பித்தும் வாழ்ந்தனர். ‘எனவே, அவர்கள் அளவுமீறிய சத்தத்தின் மூலம் அழிக்கப்பட்டனர்.’ (அல்ஹாக்கா – 5) என குர்ஆன் தெரிவிக்கிறது.
ஆத் சமூகத்தினர் அழிக்கப்பட்ட விதம் பற்றி கூறும் அல்குர்ஆன் ‘கடும் குளிர்ச்சியான கடும் காற்றின் மூலம் ஆத் கூட்டத்தார் அழிக்கப்பட்டனர்.
தொடர்ந்தும் ஏழு இரவுகளும் எட்டுப் பகல்களுமாக அதனை அவர்கள் மீது அல்லாஹ் வீசச் செய்தான். அவர்கள் ஈச்ச மரங்களது வெறுமையான அடிக்குற்றிகள் விழுந்து கிடந்தததைப் போல் இருந்தததை நீங்கள் பார்க்கலாம்.’ (அல்ஹாக்கா – 6,7) என விபரித்தது.
இவ்வாறு முன்னைய சமூகங்களது அழிவுபற்றியும் அழிக்கப்பட்டதற்கான காரணங்களையும் விளக்கும் அல்லாஹ் ஒரு சந்தர்ப்பத்தில் ‘நகரங்களில் வாழ்பவர்கள் தமது தண்டணை அவர்களுக்கு அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில், முற்பகல் வேளையில் வரமாட்டாது என அச்சமற்றவர்காக இருக்கிறார்களா? என்ன, இம்மக்கள் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருக்கின்றார்களா? உண்மையில் அழிந்து போகக்கூடிய மக்கள் தாம் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருப்பார்கள்.” (அஃராப் – 97-99) எனக் கூறுகிறான்.
