2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள மல்வென் பமிலி ரிசோர்ஸ் சென்டரில் நடைபெற்ற டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025, உலகத் தமிழ் சமூகத்திற்கான மறக்க முடியாத வரலாற்றுப் பதிவாக அமைந்தது.
கனடியத் தமிழர் பேரவை (CTC) மற்றும் ஐக்கிய இலங்கை முஸ்லிம் பேரவை – கனடா (USLMCC) ஆகிய இரண்டு முக்கியமான சமூக அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த நிகழ்வு, தமிழ்மொழியை மதம், இனப்பாகுபாடு, பின்னணி, நம்பிக்கை வித்தியாசங்களைத் தாண்டி ஒன்றுபட்ட உணர்வுடன் கொண்டாடிய அரிய தருணமாக திகழ்ந்தது.
கனடாவின் கடும் குளிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் இரு நாட்களும் மக்கள் பெருமளவில் பங்கேற்று அரங்கத்தை உயிரூட்டினர். இந்த நிகழ்வில் ஆறு புதிய தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டன, பல தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் வாசகர்களுடன் நேர் உரையாடலில் ஈடுபட்டனர், பதிப்பாளர்கள் தங்கள் புதிய படைப்புகளை அறிமுகப்படுத்தினர், சமூகத்தின் வாசிப்பு மற்றும் அறிவியல் சார்ந்த ஆர்வம் பெரிதும் வெளிப்பட்டது.
டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம், புத்தகங்களை மட்டுமல்ல, தமிழர் அடையாளத்தின் வலிமையை, ஒன்றுபாட்டின் மகத்துவத்தை, தமிழ்மொழியின் தொடர்ந்த பயணத்தை உலகுக்கு மீண்டும் நினைவூட்டியது.
இந்த நிகழ்வின் வெற்றிக்கு பின்னால் அபரிமித உழைப்பைச் செலுத்திய ஆலோசனைக் குழு, ஒருங்கிணைப்புக் குழு, ஆதரவு அமைப்புகள், அனுசரணையாளர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றியை தெரிவித்தனர்.
“இது தொடக்கம் மட்டுமே; வருங்கால சந்ததிகளுக்காக தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை உயர்த்திப் பாதுகாக்க நாம் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்,” என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025, தமிழில் வாழும் உலகத் தமிழர்களின் பெருமைக்குரிய புதிய வரலாற்றுப் பக்கத்தை திறந்துள்ளது.

