நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் தாக்கத்தினால் நிலவிவரும் அசாதாரண பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களின் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் தனியார் துறையிலிருந்து முக்கியமான உதவி முன்வைக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டம், மடிகே மிதியாலையைச் சேர்ந்த Kosma Feed Mills (Pvt) Ltd நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் அர்ஹம், அரசாங்கத்தின் நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக ரூ. 10 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளார். குறித்த நிதிக்கான காசோலையை அவர் பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களிடம் நேரடியாக கையளித்தார்.
இதனிடையே, “அரசாங்கத்தின் பொருளாதார முன்னேற்ற முயற்சிகள் மேலும் வலுப்பெற வேண்டும். நாட்டின் மீட்சி மற்றும் மக்களின் நலனுக்காக எங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். குருநாகல் மாவட்டம், குறிப்பாக மடிகே மிதியாலை மக்களின் சார்பாக அரசாங்கத்திற்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என அல்ஹாஜ் அர்ஹம் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையின் இத்தகைய பொறுப்புணர்வான பங்களிப்புகள், தேசிய அளவில் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய அடையாளமாகக் கருதப்படுகின்றன.
