வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தான அறிவிப்பை தேசிய அனர்த்த நிவாரண மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.
இதற்கான சுற்றுநிரூபம் மாவட்ட மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
குறிப்பாக முற்றாக அழிவடைந்த வீடுகள், பகுதியளவில அழிவடைந்த வீடுகள் , வெள்ளத்தினால் சிறியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் 25,000 நிவாரணம் வழங்கப்படும்.
ஒவ்வொரு வீட்டு அலகும் இந்த நிவாரணத்திற்கு தகுதியுடையது. அத்துடன் நிவாரணத்தை வழங்குவதற்கு முன்னர் சேத மதிப்பீடுகளும் தேவையில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலம் மற்றும் சொத்து உரித்துடைமையை பொருட்படுத்தாமல் நிவாரணம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,
நிரந்தர குடியிருப்பாளர்கள்
மலையக வீட்டுக் குடியிருப்பாளர்கள்
வாடகை வீட்டில் இருப்பவர்கள்
அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் இருப்பவர்கள்
அரசு வழங்கிய வீடுகளில் வசிப்பவர்கள்
அரச பதிவுக்குட்பட்ட சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்கள் மற்றும் விசேட தேவையுடையவர்கள் இருக்கும் மத்திய நிலையங்கள்
இதேவேளை குறித்த நிவாரணம் ஒரு வீட்டிற்கென ஒரு தடவை மாத்திரமே வழங்கப்படும். அத்துடன் ஒரே தடவையில் 25,000 ரூபா என்ற முழுத் தொகையும் நிவாரணமாக வழங்கப்படும்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள குறித்த சுற்றறிக்கையின் ஊடாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.


