பாரம்பரிய மருத்துவம் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாடு புதன்கிழமை (17) இந்தியாவின் புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஆரம்பமானது.
அந்த வகையில் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவிற்கும் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (18) காலை மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதன்போது, அண்மையில் நாட்டைப் பாதித்த பேரழிவை எதிர்கொண்டு, நாட்டில் சுகாதார சேவைகளை தொடர்ந்து வலுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் தலையீடுகள், உதவி, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.
மேலும், அவசரகால பேரிடருக்கு பின்னர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பிலும் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரிடம் கேட்டறிந்துகொண்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், அனர்த்தத்திற்கு பின்னரான நடவடிக்கைகளை அரசாங்கம் முறையாக மேற்கொண்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் மக்களிலும் தொற்று நோய்கள் ஏற்படவோ அல்லது பரவவோ கூடாது என்பதை உறுதி செய்வதற்கு சுகாதாரத் துறை தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவிவித்தார்.
இதுபோன்ற பேரிடரில் தொற்று நோய்களைக் குறைந்தபட்சமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் மற்றும் தொற்று நோய்கள் பரவினால் ஏற்படக்கூடிய ஆபத்தான சூழ்நிலை குறித்தும் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
புதன்கிழமை (17) ஆரம்பமாகிய உலக சுகாதார அமைப்பின் (WHO) பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலகளாவிய மாநாட்டின் இரண்டாவது நாள் இன்று என்பதுடன் நாளை (19) வரை குறித்த மாநாடு இந்தியாவின் புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும்.
பாரம்பரிய மருத்துவத்திற்கான சான்றுகள், ஒருங்கிணைப்பு மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு (WHO) ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரச அமைச்சர்கள், விஞ்ஞானிகள், பழங்குடித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

